விழுப்புரம் அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த சிறுவன் ஜீவா(12). இவரின் தாய் தந்தை கடந்த ஆண்டு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். இவர் தற்போது, உமாபதி என்பவரின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார்.
ஜீவா, விழுப்புரம் காமராஜர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6ஆம் வகுப்பு படித்து வருகிறர். இவர், நேற்று (9அம் தேதி) இரவு அவரது வீடு அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, கீழே கேட்பாரற்று ஒரு கை பை இருந்தைக் கண்டார். மேலும், அந்த பையில் ரூ. 2,000, செல்போன், ஏ.டி.எம். கார்டுகள் உள்ளிட்டவை இருந்ததை அச்சிறுவன் கண்டுள்ளார். அதனைத் தொடர்ந்து அச்சிறுவன் அந்தப் பையை தனது வீட்டிற்கு எடுத்துச் சென்று உமாபதியிடம் கொடுத்து ‘யாரோ விட்டு போய்ட்டு இருக்காங்க. இதை போலீஸ் ஸ்டேஷன்ல கொடுத்திடலாம்’ என்று தெரிவித்திருக்கிறார். அதன்படி, இன்று காலை சிறுவன் ஜீவா, உமாபதி ஆகியோ அந்தப் பையை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதாவிடம் நேரில் ஒப்படைத்தனர்.
ஜீவாவின் நேர்மையைப் பாராட்டி காவல் கண்காணிப்பாளர் அவருக்கு பொன்னாடை போர்த்தி பரிசளித்தார். மேலும், நிச்சயம் இந்த பை உரியவரிடம் ஒப்படைக்கப்படும் எனத் தெரிவித்தார். அதேபோல், மாவட்ட காவல்துறை சார்பில், காணமல்போன கை பைக்கு உரியவர் யாராக இருந்தாலும் தகுந்த ஆதாரங்களை சமர்ப்பித்து தங்களது பொருட்களை நேரில் வந்து பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளனர்.