கோடை வெயில் வாட்டி வரும் நிலையில் தமிழகத்தில் சில இடங்களில் சூறைக்காற்றுடன் மழையும் பொழிந்து வருகிறது. தமிழகத்தில் ஈரோட்டில் இன்று அதிகபட்சமாக 110 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர். திருவள்ளூரில் இன்று 105 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துள்ளனர். அதேநேரம் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி அடுத்த மூன்று மணி நேரத்தில் சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ராமநாதபுரம், சேலம், கள்ளக்குறிச்சி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் சுற்றுவட்டாரத்தில் காற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. திண்டுக்கல் நகர், ஆர்.எம்.காலனி, செட்டி நாயக்கன்பட்டி, ராஜாக்கப்பட்டி, நாகல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை பொழிந்து வருகிறது. தேனி மாவட்டம் கம்பம், கூடலூர், சுருளிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் மழை பொழிந்து வருகிறது.
சேலம் மாவட்டம் வாழப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டாவது நாளாக மிதமான மழை பொழிந்து வருகிறது. கருமந்துறை, பகுடுபட்டு, தேக்கம்பட்டு, பாப்பநாயக்கன்பட்டி உள்ளிட்ட ஊர்களில் அரை மணி நேரத்திற்கு மேலாக மழை பொழிந்து வருகிறது. அதேபோல் தமிழகத்தின் சென்னை, கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கடலில் ராட்சத அலைகள் உருவாகும் என்பதால் மீனவர்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.