உலகை மிரட்டும் கரோனா வைரஸ் தொற்றை விரட்ட மருத்துவ உலகம் போர் புரிந்து வரும் நிலையில் இந்தியாவில் இன்று ஒரு நாள் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியாளர்கள் அறிவித்தாலும் மருத்துவ உலகம் உறுதி செய்தததாலும் மக்கள் ஏற்றுக் கொண்டு தங்களது வீடுகளிலேயே தனிமைபட்டுள்ளார்கள்.
ஜவுளி நகரமான ஈரோடு எப்போதுமே பரபரப்பாக இயங்கும். ஆனால் இன்று அதன் மூச்சே இல்லை. நிறுவனங்களில் பணிபுரியும் ஓரிரு தொழிலாளர்கள் மட்டுமே சாலையில் தென்படுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பேருந்துகள் இயங்கும் ஈரோடு பேரூந்து நிலையம் இன்று பளிச்சென காணப்படுகிறது. இங்கு மாநகராட்சி தொழிலாளர்கள் சிலர் கிருமி நாசினி தெளித்து வருகிறார்கள்.
போக்குவரத்து நெரிசல் இருக்கும் மேட்டூர் ரோடு, சத்தி ரோடு, பிரப் ரோடு, ஆர்.கே.வி.ரோடு ஆள் அரவமற்று காணப்படுகிறது. ஜவுளி நிறுவனங்கள் தினசரி மார்கெட் இழுத்து பூட்டப்பட்டு கிடக்கிறது. ஓரிரு டூவீலர்கள் ஆம்புலன்ஸ் மற்றும் சில போலீசார் மட்டுமே காணப்படுகிறார்கள். இதேபோல் கோபிசெட்டிபாளையம், பவானி, பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, சிவகிரி, சென்னிமலை என மாவட்டத்தின் அனைத்து ஊர்களிலும் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. கரோனா வைரஸ் தொற்று மக்களை மரண பயத்தை ஏற்படுத்துகிறது என்பதையும் அது வராமல் இருக்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த சுய ஊரடங்கு மூலம் தெரிய வருகிறது.