தமிழக சிறைகளுக்கு புதிதாக வரும் கைதிகளுக்கு கரோனா வைரஸ் மருத்துவப் பரிசோதனை கட்டாயமாகிறது. இதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறைகளில் கரோனா சிகிச்சைக்கென தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொற்று ஏற்படுவதில் இருந்து காத்துக்கொள்ள ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 3 அடி தொலைவில் இடைவெளியைக் கடைப்பிடிக்கும் சமூக விலகல் அவசியம் என்கிறது சுகாதாரத்துறை.
நோய்த்தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தமிழக சிறைச்சாலைகளில் கைதிகளிடையே நெருக்கத்தைக் குறைக்கும் நோக்கில், முதல்கட்டமாக 2400 விசாரணைக் கைதிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். நன்னடத்தை விதிகளின் கீழ் பரோல் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
புதிதாக சிறைக்கு வரும் கைதிகளை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக, ஒவ்வொரு சிறையிலும் புதிய கைதிகளுக்காக தனிமை வார்டுகள் தொடங்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. மாவட்டத்திற்கு ஒரு சிறை வீதம் 37 சிறைகளில் கரோனா சிகிச்சைக்கான தனிமை வார்டுகள் அமைக்க சிறைத்துறை டிஐஜி சுனில்குமார் சிங் உத்தரவிட்டுள்ளார்.
கரோனா தனிமை வார்டுகள் அமைக்கப்பட உள்ள சிறைகளில் ஏற்கனவே உள்ள கைதிகளை, அருகில் உள்ள மற்ற சிறைகளுக்கு மாற்றவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை ஆத்தூர் கிளைச்சிறையில் இருந்த கைதிகள் 20 பேர் சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டு உள்ளனர். கிருஷ்ணகிரி சிறையில் இருந்த 7 பெண் கைதிகள் சேலம் பெண்கள் சிறைக்கும், நாமக்கல் சிறையில் இருந்த 3 கைதிகள் ராசிபுரத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
''புதிதாக வரும் கைதிகள் மற்றும் ஏற்கனவே பரோலில் சென்று விட்டு மீண்டும் சிறைக்கு திரும்பும் கைதிகளை தனிமை வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் வகையில் சிறைச்சாலைகளில் கரோனா தனிமை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகின்றன,'' என சிறைத்துறை அதிகாரிகள் கூறினர்.