கரோனா ஊரடங்கு காரணமாக சுற்றுலா வாகனங்கள், ஆட்டோக்கள், பேருந்துகள், சரக்கு லாரிகள், உள்ளூர் பயணிகள் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் உள்ளிட்ட போக்குவரத்துத் தொழிலை நம்பியுள்ள உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகப்பெரிய பாதிப்புக்குள்ளாகினர்.
இதனைக் கருத்தில் கொண்டு, புதுச்சேரி அரசு சாலை வரி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி சுற்றுலா வாகன உரிமையாளர்கள் - ஓட்டுனர்கள் அனைத்து சங்க நல வாழ்வாதாரக் கூட்டமைப்பு சார்பில் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் விளைவாக புதுச்சேரி அரசு 6 மாத காலத்திற்கு சாலை வரியை ரத்து செய்து 21 கோடி ரூபாய் சாலை வரியைத் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கு புதுச்சேரி மாநில சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் அனைத்து சங்க நல வாழ்வாதார கூட்டமைப்பு சார்பில் முதலமைச்சர் நாராயணசாமியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
ஏ.ஐ.டி.யு.சி மாநிலப் பொதுச்செயலாளர் சேதுசெல்வம், சி.ஐ.டி.யு.சி புதுச்சேரி பிரதேச செயலாளர் சீனுவாசன் ஆகியோர் தலைமையில், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர் சங்க நிர்வாகிகள் ஆனந்தன், கோபாலகிருஷ்ணன், சீனு செல்வகுமார்,சார்லஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.