திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு கிராமத்தில் மெர்குரி காலணி உற்பத்தி தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலை ஆகஸ்ட் 9ந் தேதி ஞாயிற்றுக்கிழமை நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை வரவைத்து செயல்பட்டது. இதனைப்பார்த்து அப்பகுதி மக்கள் பார்த்து அதிர்ச்சியாகி வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தமிழக அரசு முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறி பணியாட்களை கொண்டு தொழிற்சாலை இயங்கியதை கேட்டு வருவாய் துறையினர் அதிர்ச்சியடைந்தனர். வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், அதிகாரிகளை அங்கே அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். வாணியம்பாடி காவல்துறையினரும் அங்கே சென்றனர்.
தொழிலாளர்கள் அழைத்து வரப்பட்டு உள்ளே பணி செய்வதை அதிகாரிகள் உறுதி செய்தனர். உடனடியாக தொழிற்சாலை மேலாளர் மற்றும் உரிமையாளர்களிடம் பேசி தொழிலாளர்களை உடனே வெளியேற்றினர். மேலும் சம்பவயிடத்துக்கு வந்த கோட்டாச்சியர் காயத்ரி தலைமையிலான வருவாய்த்துறையினர் தொழிற்சாலைக்கு சீல் வைத்தனர்.
இதுதொடர்பாக காவல்துறைக்கு புகார் தரப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, விதிகளை மீறியதால் வருவாய்த்துறை விசாரணை நடைபெறுகிறது, அந்த தொழிற்சாலைக்கு பேரிடர் மேலாண்மை சட்ட விதிகளின்படி அபராதம் விதித்ததோடு, தொழிற்சாலை இயங்குவவதை தற்காலிகமாக நிறுத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது.