2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி இன்று அல்லது நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கன்னியாகுமரிக்கு பிரதமர் வந்துள்ளார். அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை மார்க்கமாக விவேகானந்தர் கல்லூரிக்கு வந்த அவர் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.இந்த கூட்டத்தில் அண்மையில் பாஜகவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்த நடிகர் சரத்குமார், அவரது மனைவி ராதிகா மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பேசிய நடிகர் சரத்குமார், ''57 ஆண்டுகள் தமிழகத்தில் இந்த திராவிட கட்சிகள் ஆட்சி செய்தன. அது என்ன திராவிடம் என்று புரியவில்லை. நான் ஒரு சில அதிகாரிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். திராவிடத்தை புரிந்து கொள்ளாமல் திராவிடம் திராவிடம் என்று சொல்லி ஒரு குடும்ப அரசியலும், மன்னர் ஆட்சியும் தான் தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஒரு சாதாரண தொண்டன், ஏழை எளிய தொண்டன் நாட்டுக்காக சேவை செய்ய வேண்டும் என்று வருவதற்கு, ஒரு தலைவன் ஆவதற்கு, ஒரு பதவியில் அமர்வதற்கு வாய்ப்பு இல்லாத இடத்தில் கையை கட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
பிரதமரை பற்றி நான் நெல்லையில் நடந்த கூட்டத்திலேயே சொன்னேன். இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் இந்தியாவின் பெருமையை ஒரு தலைவன் எடுத்துச் சென்றிருக்கிறான் என்றால் அது பிரதமர் மோடி தான். அவருடைய வாழ்க்கை வரலாறு தெரியாதவர்கள் பேசிக் கொண்டிருக்கலாம். ஒரு சிறந்த தலைவரை நாம் அடையாளம் காட்ட வேண்டும். ஒரு சிறந்த தலைவனுக்கு உழைப்பு இருக்க வேண்டும், உறுதி இருக்க வேண்டும், நியாயம் இருக்க வேண்டும், தர்மம் இருக்க வேண்டும், செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும்'' என்றார். தொடர்ந்து பேசிய அவர் பேச்சின் இறுதியில் ‘பாரத் மாதா கி ஜெ’ என மூன்று முறை முழங்கி தனது உரையை நிறைவு செய்தார்