தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் அருகே கடந்த சில தினங்களுக்கு முன் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள எம்.பி.ரவீந்திரநாத்திற்குச் சொந்தமான தோட்டத்தில் உள்ள வேலியில் சிக்கி சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.
இது தொடர்பாக தோட்டத்தில் ஆட்டுக்கிடை அமைத்திருந்த ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன், ரவீந்திரநாத் எம்.பி.யின் தோட்ட மேலாளர்கள் தங்கவேல், ராஜவேல் என மூன்று பேரை வனத்துறையினர் கைது செய்தனர்.
மேலும் தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி. உள்பட 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்வதற்காக வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வந்த நிலையில், ரவீந்திரநாத் எம்.பி மீது விசாரணை நடத்த மக்களவை சபாநாயகருக்கு கடந்த வாரம் தேனி மாவட்ட வன அலுவலர் கடிதம் அனுப்பியிருந்தார்.
இந்த நிலையில் சிறுத்தை உயிரிழப்பு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு ரவீந்திரநாத் எம்.பிக்கு வனத்துறையினர் சம்மன் அனுப்பி உள்ளனர். இரண்டு வாரத்திற்குள் ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி உள்ளதாக தேனி மாவட்ட வன அலுவலர் சமர்தா தகவல் தெரிவித்துள்ளார்.