தமிழ்நாடு முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், 2023 - 2024 ஆம் கல்வி ஆண்டுக்காக ஜூன் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படவிருந்தன. அதே சமயம், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைக்க வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்கள் வகுப்பறைகளில் அமர்வது கடும் சிரமம் என்று 1 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 7 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் எனப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார்.
தொடர்ந்து வெயிலின் தாக்கம் குறையாததால் அமைச்சர் அன்பில் மகேஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக்கு பின் மீண்டும் பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வெளியிட்ட உத்தரவில், 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதியும், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜூன் 14 ஆம் தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின் பள்ளிகள் திறப்பை முன்னிட்டு 3 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அரசு அறிவித்தது. இந்நிலையில் நீட்டிக்கப்பட்ட கோடை விடுமுறை முடிந்த நிலையில் இன்று பள்ளிகள் திறக்கப்படுகின்றன. தொடர்ந்து பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டதற்கு சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.