வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த குன்னத்தூர் பகுதியை சேர்ந்தவர் மனோகர். இவரது மகன் விஜி. 28 வயதாகும் விஜி இருசக்கர பழுது நீக்கம் வேலை செய்து வருகிறார். இவர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுப்பட்டு வாகனங்களை திருடியதாக வழக்கும் உள்ளது.
இது தொடர்பாக சில வாரங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். சமீபத்தில் தான் சிறையில் இருந்து வெளியில் வந்துள்ளார். இந்த நிலையில் வாணியம்பாடி நகர போலீசார் அக்டோபர் 2ந் தேதி காலை ஒரு வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என விஜியை போலிஸார் வந்து அழைத்து சென்றனர். பின்னர் அவரை அப்படியே ரிமாண்ட் செய்து வாணியம்பாடி நீதிமன்றத்தில் நிறுத்தினர். அங்கு விஜிக்கு பிணை கிடைத்தது.
இந்நிலையில் அக்டோபர் 2ந் தேதி மாலை, எங்கள் மகன் திருந்தி வாழ நினைக்கிறான், ஆனால் போலிஸார் வேண்டும்மென்றே அவனை பிடித்து வந்து பொய்யாக திருட்டு வழக்குகளை பதிவு செய்து சிறையில் அடைக்கின்றனர். போலிஸார் பொய் வழக்கு போடுவதை கைவிட வேண்டும் எனக்கூறி போலீசை கண்டித்து வாணியம்பாடி நகர காவல் நிலையம் முன்பு விஜியின் தந்தை மனோகர், தாய் ராஜேஸ்வரி, மனைவி மைதிலி ஆகியோர் நகர காவல் நிலையம் நின்று தங்கள் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்ள முயன்றனர்.
அப்போது காவல்நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் அதிர்ச்சியாகினர். இரண்டு பெண் போலிஸார் ஓடிவந்து அவர்கள் தீ வைத்துக்கொள்ளாமல் தடுத்தி நிறுத்தியும், அவர்கள் கையில் வைத்திருந்த பூச்சி மருந்து டப்பாவை பறிமுதல் செய்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் அவர்களை மீண்டும் காவல்நிலையம் வரவைத்த போலிஸார், தற்கொலை முயற்சி என வழக்கு பதிவு செய்கிறோம் என மிரட்டி அனுப்பியுள்ளனர். இதனால் அக்குடும்பம் நொந்துப்போய்வுள்ளது.
வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் இருசக்கர வாகனங்கள் திருடு போகிறது என்கின்றனர் காவல்துறை தரப்பில். சந்தேகப்பட்டியலில் உள்ளவர்களை விசாரணைக்கு என அழைத்து வந்தாலே இப்படி கிளம்பி வந்துவிடுகிறார்கள் என சலிப்படைகிறார்கள்.