![Sugar mill that cheated the farmers](http://image.nakkheeran.in/cdn/farfuture/T-e7nXNtlWdj6GtrwMop7TneJhb-9VFBe949-_ETrh8/1539739220/sites/default/files/inline-images/91.jpg)
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அம்பிகா மற்றும் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகங்கள் விவசாயிகளுக்கு கரும்பு நிலுவை தொகை வழங்குவதாக கூறி கருவேப்பிலங்குறிச்சி, சிறுபாக்கம், கழுதூர் ஆகிய ஊர்களில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியில் 300 கோடி கடன் வாங்கியுள்ளன.
ஆனால் விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய நிலுவை தொகைகளை வழங்காமல் ஆலை நிர்வாகங்கள் காலம் தாழ்த்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள், சாலை மறியல் நடத்தியும் ஆலை நிர்வாகம் விவசாயிகளை கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி, 'வாங்கிய கடனை கட்டுங்கள்' என்று விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயிகள் வங்கி மேலாளரிடம் விசாரித்தபோது, ஆரூரான் மற்றும் அம்பிகா சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகள் பேரில் கடன் வாங்கியது தெரிய வந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் ஜனநாயக விவசாய சங்கத்தின் சார்பில் கருவேப்பிலங்குறிச்சி பாரத ஸ்டேட் வங்கி முன்பு கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அம்பிகா மற்றும் சித்தூர் ஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் வாங்கிய கடனுக்கு, கடன் வாங்காத விவசாயிகளை ஜாமீன்தாரராக ஆக்கியதை ரத்து செய்ய வேண்டும், விவசாயிகளுக்கு கொடுக்க வேண்டிய 5 ஆண்டு நிலுவைத் தொகையான 58 கோடியை வட்டியுடன் வழங்க வேண்டும், மத்திய அரசு அறிவித்த கொள்முதல் விலையை அமல்படுத்த வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் பாரத ஸ்டேட் வங்கி மேலாளரிடம் ஆலை வாங்கிய கடனுக்கும், விவசாயிகளுக்கும் சம்பந்தமில்லை என்று மனு அளித்தனர். சர்க்கரை ஆலை நிர்வாகம் மற்றும் தமிழக அரசானது விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், அனைத்து விவசாயிகளையும் திரட்டி தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் விவசாயிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.