விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாத நடிகர் கமல்ஹாசனுக்கு பதில் சொல்லிக்கொண்டு நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை என தமிழக உணவுத்துறை அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்திருப்பது கஜா புயல் நிவாரண பணிகளில் இருக்கும் கமல் ரசிகர்களை கோபப்படவே செய்துள்ளது. கஜாபுயலின் கோரதாண்டவம் நாகை, திருவாரூர், தஞ்சை மாவட்டங்களை புரட்டிபோட்டுள்ளது. சோகத்தில் இருக்கும் மக்களுக்கும், விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கு ஆதரவாக பல தொண்டு நிறுவனங்களும், அரசியல் கட்சியினரும், சமுக செயற்பாட்டாளர்களும், நடிகர்களும் உதவிகரம் நீட்டிவருகின்றனர். கஜாபுயல் கறையேறிய நாள் முதல் கமல்ஹாசனின் ரசிகர்கள் மக்களோடு மக்களாக தோள்கொடுத்து நின்றுவருகின்றனர். கமல் தாமதமாக வந்தாலும், அனைத்துப்பகுதிகளுக்கும் சென்று மக்களை சந்தித்து உதவிகளை செய்துவருகிறார்.
கஜா புயல் பூமியில் தமிழக அமைச்சர்களை விட அதிக நேரம் செலவழித்து மக்களிடம் அக்கரையுடன் உரையாடி வரும் கமல், “கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காணவேண்டும்.” என்று கூறினார்.
அதற்கு உடனே பதிலடிகொடுத்த அமைச்சர் செல்லூர் ராஜூவோ “தமிழக அரசு அதி வேகமாக செயல்பட்டு வருகிறது கஜா புயலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவை செய்து வருகிறது கூர்மையான அரசு. ஆனால் மூளையில் கோளாறு உள்ள கமல்ஹாசனுக்கு இதெல்லாம் தெரியாது. அவருக்கு டாக்டர்கள் வைத்து சீக்கிரம் சிகிச்சை அளிக்கவேண்டும்” என்று கடுமையாக கடுகடுத்து பேட்டியளித்தார்.
அந்தவகையில் அமைச்சர் காமராஜீம் பஞ்ச் டயலாக்கை ரைமிங்காக கூறியுள்ளார். “நடிகர் கமல்ஹாசனுக்கு விவசாயத்தைப் பற்றி எதுவுமே தெரியாது, தெரியாமல் பேசக்கூடாது. திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் 573 வருவாய் கிராமங்கள் உள்ளன. இதில், 464 கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. என்பது கமல்ஹாசனுக்கு தெரியுமா? மக்கள்நலனைக் கருதும் யாரும் இந்த நேரத்தில் இப்படி நடந்து கொள்ளமாட்டார்கள். கமலுக்கு தினமும் ஒரு பேச்சு. தினமும் ஒரு செய்தி. அவருக்கெல்லாம் பதில்சொல்லி, நேரத்தை வீணடிக்க நாங்கள் விரும்பவில்லை.” என்றார் காமராஜ்.