சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், 4 வருடம் சிறைத் தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி சசிகலா விடுதலையானார். அவருடன் சிறையிலிருந்த இளவரசி பிப்ரவரி 5ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து சுதாகரன் இன்று (16.10.2021) விடுதலையாக இருக்கிறார். முன்னதாக விடுவிக்கப்பட்ட சசிகலா, இளவரசி ஆகியோர் 10 கோடி ரூபாய் அபராதம் செலுத்தியிருந்தனர். அபராதம் செலுத்தாததால் சுதாகரன் மட்டும் கூடுதலாக ஒரு வருடம் சிறையிலிருந்தார். இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம்வரை சிறையிலிருக்க வேண்டிய சுதாகரன், 89 நாட்களுக்கு முன்னதாகவே இன்று விடுதலையாக இருக்கிறார்.
அதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அவரது தோழி சசிகலா இன்று மரியாதை செலுத்த இருக்கிறார். சென்னை தி.நகரில் உள்ள இல்லத்திலிருந்து இன்று காலை 10.30 மணிக்குப் புறப்பட இருக்கும் சசிகலா, மெரினாவில் உள்ள ஜெ. நினைவிடம் செல்கிறார். அங்கு அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்தும் சசிகலா, அதன் பிறகு அதே மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர். மற்றும் அண்ணா நினைவிடத்திலும் மரியாதை செலுத்த இருக்கிறார். இதற்காக போலீஸ் பாதுகாப்பும் கேட்டுள்ளார் சசிகலா. ஏற்கனவே கடந்த 2017 பிப்ரவரி மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்வதற்கு முன்பு ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா மரியாதை செய்ததோடு சத்தியமும் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.