திருப்பத்தூர் அடுத்த பசலி குட்டை பகுதியில் உள்ள முருகன் ஆலயத்தில்ஆண்டுதோறும் ஆடி மாதம் ஆடி 18 ஆம் நாள் அன்று ஆடிப்பெருக்கு திருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் இன்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடிகள் மற்றும் தேர் இழுத்துக் தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி விட்டு முருகப் பெருமானை தரிசித்து சென்றனர்.
இந்நிலையில் அங்கு பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக பல்வேறு வகையான ராட்சத ராட்டினங்கள் அமைக்கப்பட்டிருந்தது. மாலை இன்னிசைக் கச்சேரி நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் அதனைக் காண்பதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குவிந்திருந்தனர். ஒருப்பக்கம் முருகனை தரிசித்து விட்டு ஏராளமான பக்தர்கள் ராட்சத ராட்டினங்கள் சுற்றுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
இரவு நேரமாகியும் அதை பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ராட்சத ராட்டினத்தில் பொழுதைக் கழித்தனர். அப்போது திடீரென ராட்சத ராட்டினம் சாய்ந்ததால் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து பயத்தில் உறைந்தனர். இந்நிலையில் உடனடியாக ராட்சத ராட்டின ஆபரேட்டர்கள் ராட்டினத்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் ராட்சத ராட்டினத்தில் சிக்கிக் கொண்ட பொதுமக்களை பத்திரமாக மீட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு காணப்பட்டது.
ராட்சத ராட்டினங்கள் அனுமதியின்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், மேலும் போதுமான பாதுகாப்பு இல்லை எனவும் இதுபோன்ற விபரீதம் ஏற்பட்டதற்கான காரணம் ராட்சத ராட்டினத்தில் இரண்டு பேர் அமர வேண்டிய பேட்டியில் நான்கு பேர் அமர வைத்ததால் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.