கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேலவீதியில் உள்ள பிரபலமான ஒரு ஜவுளிக்கடையில் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய இடத்தில் கேமரா வைத்திருந்த விவகாரத்தில் ஜவுளிக்கடை மேலாளர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
பிரபலமான அந்த ஜவுளிக்கடைக்கு கடந்த 25-ந் தேதி ஜவுளி எடுக்க வந்த தேவனூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர், அங்குள்ள உடை மாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அறையின் மேல்பகுதி ஏ.சி. வெண்டிலேட்டரில் கேமரா செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்ததுடன், அவர், சம்பவம் குறித்து கடை மேலாளர் ஏழுமலை (வயது 31) என்பவரிடம் புகார் தெரிவித்தார். இந்த நேரத்தில் உடை மாற்றும் அறையில் மறைத்து வைத்திருந்த அந்த செல்போன் கீழே விழுந்தவுடன் அந்த கடையில் பணிபுரியும் 22 வயது பெண் உடனடியாக செல்போனை கையில் எடுத்து அதில் இருந்த மெமரி கார்டை அப்புறப்படுத்தியுள்ளார். இதையடுத்து தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோவிலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு மனோஜ்குமார், இன்ஸ்பெக்டர்கள் ராதிகா, பாபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் சிவச்சந்திரன், ராஜசேகரன் ஆகியோர் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது கடையில் வேலை பார்த்த அந்த 22 வயது பெண்ணின் சகோதரரும், அதே கடையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருபவருமான விக்னேஷ் என்பவர் உடை மாற்றும் அறைக்குள் சென்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து விக்னேஷிடம் விசாரணை நடத்திய போலீசாரிடம் கீழே கிடந்த செல்போனை உடை மாற்றும் அறையில் வைத்ததாக அவர் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விக்னேஷின் சகோதரியிடம் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் தனது அண்ணன் வைத்திருந்தது எனத் தெரிய வந்ததால், அந்த செல்போனில் இருந்து மெமரி கார்டை எடுத்து அவரை காப்பாற்ற முயன்றேன் எனத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து விக்னேஷ், அவரது தங்கை மற்றும் கடையின் மேலாளர் ஏழுமலை ஆகிய 3 பேரையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்டது மெமரி கார்டு வசதியுள்ள சாதாரண கேமரா செல்போன் என்றும் அதில் எந்த காட்சிகளும் பதிவாகவில்லை என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.