சென்னை அரும்பாக்கத்தில் உள்ளது 'ஃபெடரல் வங்கி' கிளை. இங்குள்ள தங்க நகைக்கடன் பெறும் பிரிவில் லாக்கரில் இருந்த பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் வங்கியில் காவலில் இருந்த காவலாளிக்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து வங்கி ஊழியர் முருகன் மற்றும் இருவர் வங்கியின் மேலாளர் உள்ளிட்டவர்களை கட்டிப்போட்டுவிட்டு துப்பாக்கி முனையில் 11 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்தது. பாலாஜி, சக்திவேல், சந்தோஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் முக்கிய குற்றவாளியான முருகனையும் போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகையில் 8 கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில், 3.5 கிலோ நகைகள் காவல் ஆய்வாளர் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது இந்த வழக்கில் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் அமல்ராஜ் வீட்டில் திருடு போன நகைகளில் 3.5 கிலோ நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.