அதிமுக முன்னாள் அமைச்சரும், விராலிமலை தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான விஜயபாஸ்கர், ஜல்லிக்கட்டு காளைகள் வளர்ப்பதில் அதிக ஆர்வமுள்ளவர். அதனால்தான் விராலிமலை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை எடப்பாடி பழனிசாமியை வைத்து தொடங்கியும் வைத்தார்.
விஜயபாஸ்கரின் 'கொம்பன்' காளை சில வருடங்களுக்கு முன்பு வாடிவாசலில் அனைவரையும் மிரட்டி நின்று விளையாடியது. ஆனால் அந்த கொம்பனின் விளையாட்டு ரொம்ப காலம் நீடிக்கவில்லை. தமிழ்நாட்டிலேயே அதிகமான வாடிவாசல்களைக் கொண்ட தென்னலூர் ஜல்லிக்கட்டில் புயல் வேகத்தில் கொம்பன் வெளியே வரும்போதே தடுப்பு மரத்தில் மோதி தலையில் பலத்த அடிபட்டு உயிரிழந்தது. தங்கள் வீட்டுச் செல்லமாக வளர்த்த கொம்பனுக்குத் தோட்டத்திலேயே சமாதி அமைத்து தினசரி வழிபட்டுவருகின்றனர்.
அதற்கடுத்து விஜயபாஸ்கரின் வீட்டுக்கு வந்த காளைகளில் ஒன்றுதான் வெள்ளைக் கொம்பன். இந்தக் காளையும் ஜல்லிக்கட்டில் பெயர் வாங்கியது. ஆனால் திங்கள்கிழமை (11.10.2021) உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தது. வெள்ளைக் கொம்பனும் உயிரிழந்ததால் மாஜி அமைச்சரின் குடும்பமே சோகத்தில் உள்ளது.