சிவகங்கை வழியாக செல்லும் ரயில்கள் சிவகங்கையில் நிறுத்திச் செல்ல வேண்டும் என கோரிக்கை வைத்து சிவகங்கை முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், காரைக்குடியில் இருந்து வந்து கொண்டிருந்த ரயிலை சிவகங்கை அருகே வந்தபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் நடுவழியில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக காலை 9 மணி அளவில் திருச்சியிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் பயணிகள் ரயிலை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால், சிவகங்கை இரயில் நிலையத்தில் ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டு, தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. ஆனால், போலீஸாரின் தடுப்பையும் மீறி போராட்டக்காரர்கள் ரயில் நிலையத்திற்குள் சென்று தண்டவாளம் அருகே சென்றனர். இதனால் அங்கு பதட்டம் நிலவியது. இந்தப் போராட்டத்தை நடத்துவதற்காக போராட்டக்காரர்கள் காரைக்குடியில் இருந்து ரயிலில் வந்துள்ளனர். ரயில் சிவகங்கை அருகே வந்தபோது அவர்கள் ரயிலின் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினர்.
தொடர்ந்து ரயிலில் இருந்த போராட்டக்காரர்களும், வெளியே இருந்த போராட்டக்காரர்களும் என 500க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களைக் காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு ரயில் புறப்பட்டு சென்றது.