சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு தினசரி வண்டி எண் 22625 ஏசி டபுள் டக்கர் பயணிகள் விரைவு ரயில் சென்று வருகிறது. இன்று காலை சுமார் 9:30 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தைத் தாண்டி விரிஞ்சிபுரம் குடியாத்தம் இடையே சென்று கொண்டிருக்கும்போது திடீரென ரயிலின் C6 பெட்டியில் இருந்து புகை வந்தது. முதலில் சிறியதாக ஏற்பட்ட புகை பிறகு அதிகப்படியாக வந்ததால் பயணிகள் மிகுந்த அச்சத்துக்கு உள்ளாகி அலறியுள்ளனர். உடனே ரயில் நிறுத்தப்பட்டு புகை வந்ததற்கான காரணம் ஆராயப்பட்டது.
இதுகுறித்து ஜோலார்பேட்டை இருப்புப் பாதை காவல்துறையினர் தெரிவிக்கையில், 6 பெட்டியின் பிரேக் பைண்டிங் ஆனதால் வண்டியில் இருந்து புகை ஏற்பட்டுள்ளது. இதனால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை எனத் தெரிவித்தனர். இதனால் சுமார் 12 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டது. இதில் பயணிகளுக்கும் உடைமைகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில் அடுத்தடுத்த நிறுத்தங்களில் நிறுத்தி தொழில்நுட்ப வல்லுநர்களால் புகை ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு மீண்டும் அதுபோன்று ஏற்படாத வண்ணம் சரி செய்யப்பட்டு தற்போது தடையின்றி பெங்களூர் நோக்கிச் செல்கிறது. ரயிலில் இருந்து திடீரென குபுகுபுவென புகை ஏற்பட்டதால் பயணிகள் மிகுந்த அச்சத்திற்கு உள்ளாகினர்.