
சாத்தனூர் அணையிலிருந்து புறப்பட்டு வருவது தென்பெண்ணை ஆறு. இந்த ஆறு திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களைக் கடந்து கடலில் கலக்கிறது. புதுச்சேரி மாநிலம் சண்முகபுரம் பகுதியைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 32). இவர் தனது உறவினர்கள் 3 பேருடன் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள உறவினர் ஊரான அண்ராயநல்லூருக்கு துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.
துக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பும்போது ஏனாதிமங்கலம் அருகே தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே கட்டப்பட்டிருந்த சேதம் அடைந்த எல்லீஸ் அணைக்கட்டை வேடிக்கை பார்த்துவிட்டு செல்வதற்காக அணை பகுதிக்கு சென்றுள்ளார். அப்பொழுது உடைந்த தடுப்பணையில் ஏறி நின்ற கிருஷ்ணமூர்த்தி செல்ஃபோன் மூலம் செல்ஃபி படம் எடுத்துள்ளார். செல்ஃபி எடுக்கும் ஆர்வத்தில் தவறி ஆற்றுத் தண்ணீரில் விழுந்து மாயமானார் கிருஷ்ணமூர்த்தி.
ஆழமான பகுதி என்பதால் அங்கு வந்த அவரது உறவினர்கள் தேடிப்பார்த்தும் கிருஷ்ணமூர்த்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து தகவல் திருவெண்ணைநல்லூர் தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அலுவலர் சுந்தரமூர்த்தி தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படை வீரர்கள் விரைந்து வந்து எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டு ஆற்றுப்பகுதியில் தீவிரமாக கிருஷ்ணமூர்த்தியை தேடும் பணியில் ஈடுபட்டனர். காவல்துறையினர், திருவெண்ணைநல்லூர் வட்டாட்சியர் பாஸ்கரதாஸ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினர். ஆனால் இறுதியில் பலமணிநேர தேடுதலுக்கு பின் தண்ணீரில் விழுந்து மூழ்கிய கிருஷ்ணமூர்த்தி சடலமாக மீட்கப்பட்டார்.