நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ள காளிபாளையம் காலனியைச் சேர்ந்தவர் அஜீத் (20). கூலித்தொழிலாளி. இவர், கடந்த 2018- ஆம் ஆண்டு ஜூன் 9- ஆம் தேதி, தனது நண்பர்கள் ஜெகதீஸ் (26), ராஜேஷ் (30), பிரபு (28), சவுந்திரராஜன் (23) ஆகிய 4 பேருடன் சேர்ந்து மது குடித்துள்ளார்.
அப்போது போதை தலைக்கேறிய நிலையில் இருந்த நண்பர்கள், அஜீத்தின் மனைவியைப் பற்றி ஆபாசமாகப் பேசியுள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜீத், அவர்களுடன் வாக்குவாதம் செய்தார். சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றி, அவர்களுக்குள் கைகலப்பாக உருவானது. அப்போது ஆத்திரம் அடைந்த நண்பர்கள் நால்வரும் அஜீத்தை உருட்டுக் கட்டையால் சரமாரியாக தாக்கிக் கொன்றனர்.
இதுகுறித்து ஜேடர்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அஜீத்தைக் கொன்றதாக நண்பர்கள் நால்வரையும் கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை, நாமக்கல் மாவட்ட கூடுதல் முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து வெள்ளிக்கிழமை (ஜன.8) தீர்ப்பு அளித்தார்.