ஆம்பூர் பிரியாணிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு பெற மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா முயற்சி செய்து வரும் நிலையில், முதன்முறையாக பிரியாணி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது. ஆம்பூர் வர்த்தக மையத்தில் மே 13- ஆம் தேதி முதல் மே 15- ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடைபெறும் பிரியாணி திருவிழாவில் 50 கடைகளும் 30 வகையான பிரியாணிகளும் வழங்க திட்டமிடப்பட்டிருந்தது. இதற்கு 36 கடைகள் முன்பதிவு செய்தனர். கோழி மற்றும் ஆட்டிறைச்சி பிரியாணி கடைகளுக்கு மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.
ஆம்பூரில் நாள்தோறும் 4,000 கிலோ மாட்டிறைச்சி பிரியாணி விற்பனை செய்யப்பட்ட போதிலும், பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணி கடைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஆம்பூர் வர்த்தக மைய வளாகத்திற்கு வெளியே இலவசமாக மாட்டிறைச்சி பிரியாணி வழங்கப்படும் என்று தலித் கூட்டமைப்பினர் மற்றும் இஸ்லாமிய கூட்டமைப்பினர் அறிவித்தனர்.
ஆர்ப்பாட்டம் நடத்தவும் அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டிற்குள் உணவு அரசியலை நுழைய ஆம்பூர் பிரியாணி திருவிழா இடம் கொடுக்கக் கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
சர்ச்சைக்கு இடையே மழை காரணமாக, ஆம்பூர் பிரியாணி திருவிழா ஒத்திவைக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா அறிவித்தார். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை என வானிலை ஆய்வு மையம் எச்சரித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நிலையில், ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக, விளக்கம் கேட்டு மாநில பட்டியலினத்தவர் நல ஆணையம் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாட்டிறைச்சி பிரியாணி மறுக்கப்பட்டது தீண்டாமை செயல் என்று புகார் கூறப்படுவதாக ஆணையம் தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளது.