சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் உபரிநீரை 100 வறண்ட ஏரிகளுக்கு கொண்டு செல்லும் மேட்டூர் சரபங்கா உபரிநீர் திட்டத்தை திப்பம்பட்டியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். ரூபாய் 565 கோடி மதிப்பில் நிறைவேற்றப்பட்ட, இந்தத் திட்டத்தின் மூலம் மேட்டூர் அணையின் உபரிநீர் மேட்டூர், ஓமலூர், சங்ககிரி மற்றும் எடப்பாடி தொகுதியிலுள்ள 100 வறண்ட ஏரிகளுக்கு அனுப்பப்படும். இதனால் 4,238 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் ரூபாய் 5.36 கோடி மதிப்பில் புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "மேட்டூர் அணையின் உபரிநீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்திற்கு நிலம் அளித்த விவசாயிகளுக்கு நன்றி. மிகப்பெரிய திட்டத்தை வேகமாக செயல்படுத்தி நிறைவேற்றிய நிறுவனத்திற்கும் நன்றி. விவசாயிகளின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசாக அ.தி.மு.க. அரசு செயல்பட்டு வருகிறது. விவசாயிகளின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் அரசாக அ.தி.மு.க. அரசு என்றும் செயல்படும். ஐந்து ஆண்டுகளில் இரண்டுமுறை விவசாயிகளின் கடனை ரத்து செய்து சாதனை படைத்த ஒரே அரசு அ.தி.மு.க. அரசு. விவசாயிகள் பாதிக்கப்படும் போதெல்லாம் அவர்களைக் கைதூக்கி ஏற்றிவிடும் அரசாக அ.தி.மு.க. அரசு உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1- ஆம் தேதி முதல் 24 மணிநேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும். அனைத்து விவசாயத் தொழிலாளர்களுக்கும் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும். குறுகிய காலத்தில் விவசாயிகளுக்காக மேட்டூர் - சரபங்கா உபரிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது" என்றார்.
அதைத் தொடர்ந்து, முதல் ஏரியான எம்.காளிப்பட்டி ஏரிக்கு வந்த மேட்டூர் அணை நீரை மலர்தூவி முதல்வர் வரவேற்றார்.