நாமக்கல்லில் காற்றுடன் பலத்த மழை பொழிந்துவரும் நிலையில் பள்ளிபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்ததையடுத்து தீயணைப்புத் துறையினர் மீட்புப்பணியை மேற்கொண்டனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், பட்டணம், ஆண்டலூர் கேட் ஆகிய பகுதிகளில் காற்றுடன் கூடிய பலத்த மழை பொழிந்து வருகிறது. குமாரபாளையம் பகுதியில் விடிய விடிய கனத்த மழை பொழிந்தது. அதேபோல் திருச்செங்கோடு, பள்ளிபாளையம் பகுதியிலும் பலத்த மழை பொழிந்த நிலையில், பள்ளிபாளையத்தில் வெள்ளம் சூழ்ந்தது. பள்ளிபாளையம் அருகே நான்குவழிச் சாலை அருகே உள்ள கால்வாயில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலையில் மூன்றடிக்கும் மேல் நீர் ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனால் அங்கு நான்கு மணிநேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கார் உள்ளிட்ட வாகனங்கள் இந்த திடீர் வெள்ளத்தில் சிக்கியதால் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காரில் சிக்கியவர்களைக் கயிற்றைக் கொண்டு மீட்டனர். இந்நிலையில் பள்ளிபாளையத்தில் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.