
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையேயான ரயில் சேவை நாளை மறுநாள் (09.03.2025 - ஞாயிற்றுக்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே அமைக்கப்பட்டுள்ள 4வது வழித்தடத்தில் நாளை மறுநாள் ரயில் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
இதனால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே நாளை மறுநாள் காலை 05.10 மணி முதல் மாலை 04.10 மணி வரை புறநகர் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் கோடம்பாக்கம் முதல் தாம்பரம் இடையே 30 நிமிட இடைவெளியில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதே சமயம் மாலை 04.10 மணி முதல் ஞாயிறு அட்டவணைப்படி புறநகர் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - திருமால்பூர் - அரக்கோணம் இடையேயான ரயில் சேவைகளும் நாளை மறுநாள் ரத்து செய்யப்பட்டுள்ளன.