குரூப் ஒன் தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடந்து முடிந்த குரூப் ஒன் தேர்வை 1 லட்சத்து 68 ஆயிரம் பேர் எழுதினார்கள். இதற்கான முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. அந்த தேர்வு முடிவின் அடிப்படையில் 9050 பேர் மெயின் தேர்விற்கு தகுதியாகினர். ஆனால் இந்த தேர்வில் தவறான கேள்விகள் இடம்பெற்றிருந்ததாகவும், குரூப் ஒன் தேர்வே குளறுபடிகளுடன் நடந்துள்ளதாகவும் எனவே இந்த தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என சென்னையை சேர்ந்த விக்னேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
கடந்த 13 ஆம் தேதி நடந்த இந்த வழக்கின் விசாரணையில் டிஎன்பிஎஸ்சி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்வில் இடம்பெற்ற 200 கேள்விகளில் 24 கேள்விகள் தவறானது என ஒப்புக்கொண்டது. இது குறித்து விளக்கமளிக்க கால அவகாசம் தேவை என டிஎன்பிஎஸ்சி சார்பில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்திபன் போட்டி தேர்வுகளில் தவறான கேள்விகள் கேட்பதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. இதுகுறித்து சரியான விளக்கம் தேவை என தெரிவித்து டிஎன்பிஎஸ்சி பதிலளிக்க வேண்டும் என கூறி வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இந்நிலையில் இன்று தொடங்கிய வழக்கின் விசாரணையில் தவறான கேள்விகளுக்கு கூடுதல் மதிப்பெண் கொடுத்தும் எதிர்மனுதாரர் தேர்வில் வெற்றிபெறவில்லை எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்யும்படிடி என்பிஎஸ்சி தரப்பு வாதிட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி இதில் பாதிக்கப்பட்ட ஒருவரருக்கு தீர்வு கிடைத்திருக்கும் நிலையில் இதை பொதுநல வழக்காக ஏற்று ஒட்டுமொத்த தேர்வு நடைமுறைகளுக்கும் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.