கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஒருங்கிணைந்த பதிவுத்துறை அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் லட்சக் கணக்கில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி தேவநாதன் தலைமையில் பதிவுத்துறை அலுவலகத்தில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முதற்கட்டமாக, கணக்கில் வராத 3.50 லட்சம் ரூபாய் பணம் இருப்பதைக் கண்டறிந்து, அது தொடர்பாக சார்பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது விசாரணையில் கைப்பற்றப்பட்ட பணம், நிலங்களைப் பதிவு செய்ய வந்த மக்களிடம் பெற்ற லஞ்சப் பணம் என்பது தெரியவந்தது.
மேலும் தீவிரமாக நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா நாள்தோறும் அலுவலகத்திற்குப் பத்திரப் பதிவு செய்வதற்கு வரக்கூடிய பொது மக்களிடம் வாங்கும் லஞ்சப் பணத்தை, இரண்டு அல்லது மூன்று லட்சமாக சேர்த்து உளுந்தூர்பேட்டையில் உள்ள திருப்பதி திருமலை நகரில் 10 (Flate) வீட்டு மனைகள் வாங்கியுள்ளதாகவும், அதற்காக ரியல் எஸ்டேட் உரிமையாளருக்கு தான் வாங்கிய லஞ்சப் பணத்தை, ஜி-பே, வங்கி பரிவர்த்தனை மூலம் சம்பந்தப்பட்ட ரியல் எஸ்டேட் அனுப்பியதும் தெரிய வந்தது. அவ்வாறு 42 லட்ச ரூபாய் பணத்தை அனுப்பியதும் தெரிய வந்தது. அதன் ஒரு பகுதியாக நேற்று ரியல் எஸ்டேட் நில உரிமையாளரிடம் கொடுக்க வைத்திருந்த லஞ்சப் பணமான 3.50 லட்சம் ரூபாயை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனையின் போது பிடித்தனர். மேலும் அதற்கு உறுதுணையாக இருந்த புரோக்கர் உதயகுமாரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்து விசாரித்தனர்.
சுமார் 5 மணி நேர விசாரணைக்குப் பின்பு லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறுகையில், முதற்கட்டமாக கூறிய 3.50 லட்சம் ரூபாயுடன் சேர்த்து மொத்தமாக 8.10 லட்ச ரூபாய் கைப்பற்றியதாகவும், ஆனால் கைப்பற்றப்பட்ட பணம் கணக்கில் வராத பணமா? அல்லது அலுவலகத்தில் மறைத்து வைக்கப்பட்ட பணமா? அப்பணத்தை எங்கிருந்து கைப்பற்றினார்கள்? என விசாரணைக்குப் பின் தெரியவரும் எனக் கூறினர்.
மேலும் விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமாரை இன்று(01.09.2023) மீண்டும் விசாரணைக்கு வரச் சொல்லி உள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கூறினர். விருத்தாசலம் சார் பதிவாளர் சங்கீதா மற்றும் புரோக்கர் உதயகுமார் ஆகியோர் இணைந்து நிலம் பத்திரப் பதிவு செய்ய வந்த பொதுமக்களிடம் லஞ்சம் வாங்கி உளுந்தூர்பேட்டையில் கோடிக்கணக்கான மதிப்பிலான வீட்டு மனைகளை வாங்கி இருப்பதும், அதற்காக ஆன்லைன் பணப் பரிவர்த்தனை மூலம் 42 லட்ச ரூபாய் பணம் அனுப்பியதும் விருத்தாசலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.