வெளிநாடுகளில் எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு தமிழ்நாடு திரும்பிய மாணவர்கள், தமிழ்நாட்டில் ஓராண்டு மருத்துவப் பயிற்சி எடுப்பதற்காக சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மருத்துவக் கலந்தாய்வு மையத்தில் மனு அளித்திருந்தனர். அதனடிப்படையில், மருத்துவக் கலந்தாய்வு மையத்தில் ஒப்புதல் பெறப்பட்டு சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து பயிற்சிக்கான ஆணையைப் பெற்றனர்.
அத்துடன், ரூபாய் இரண்டு லட்சத்திற்கான டிடி காசோலையை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்குச் சென்று பயிற்சி பெற சான்று வழங்கப்பட்டது. அதை எடுத்துக்கொண்டு சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்றபோது மருத்துவப் பயிற்சியை தற்காலிகமாக அரசு நிறுத்திவைத்துள்ளது என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், அரும்பாக்கம் மருத்துவக் கலந்தாய்வு மையத்திற்குள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.