Skip to main content

சித்து வேலையால் ரூ.4.66 கோடி மோசடி.. கைதான போலி சாமியார்..!!!

Published on 26/11/2018 | Edited on 26/11/2018
ravi

 

 

தன்னைக் கொண்டு ஆசிரமம் அமைக்க கடவுள் உத்தரவிட்டதாகக் கூறி, சித்து வேலைகள் செய்து குவைத் வாழ் தமிழரிடம் ரூ.4.66 கோடி மோசடி செய்த போலி சாமியாரை சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.



விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் ராமதாஸ். அரேபிய நாடுகளில் ஒன்றான குவைத்திலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் சி.இ.ஓ.வாகப் பணியாற்றி வரும் இவருக்கு இரத்த அழுத்தம் உள்ளிட்ட சில உடல் ரீதியான பிரச்சினைகள் இருந்துள்ளது. அதே நிறுவனத்தில் பணியாற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்த அஷ்ரப்அலி (எ) அப்துல்அஜீஸ் தமிழர் என்ற முறையில் ராமதாஸிடம் அறிமுகமாகி, " தனக்கு தெரிந்த சித்தர் ஒருவர் சிவகங்கை அண்ணாமலை நகரில் வசித்து வருகிறார். அவர் பெயர் ரவி. அவரிடம் அறிமுகம் கிடைத்தாலேப் போதும். உங்களுடைய நோய்கள் யாவும் குணமாகும்." என்கிற ரீதியில் போலி சாமியார் ரவியை சித்தராக அடையாளம் காட்டியிருக்கின்றார் அவர். அதன் பிறகே ரூ.4.66 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது.

 

"காக்கை உட்கார விழுந்த பனம்பழம்" கதையாய், சிவகங்கை சாமியார் ரவியின் சித்து வேலைகள் மூலம் ராமதாஸிற்கு ஆரம்பத்தில் நோய் குணமாயிருக்கின்றது. கடவுள் நேரடியாக ரவி சித்தர் மூலம் பேசுகிறார் என்பதனை முழுதாய் நம்பியிருக்கின்றார். இது தான் சரியான தருணமென, "வந்தவாசியில் ஆசிரமம் அமைக்க கடவுள் உத்தரவிட்டிருக்கின்றார்." என்று கூறி வைக்க, 2015ம் ஆண்டில் முதல் தொகையாக ரூ.1.10 கோடி பணத்தை தன்னுடைய வங்கி கணக்கு மூலம் போலிச்சாமியாருக்கு அனுப்பி வைத்திருக்கின்றார் ராமதாஸ். அத்துடன் இல்லாமல், "ஏற்கனவே ஆசிரமம் அமைக்க கூறிய இடத்தில் ஆண்டவன் அனுமதிக்கவில்லை. வேறொரு இடத்தைக் காட்டுகிறார்." என மீண்டும் தகவல் கூற, அன்று தொடங்கி இந்த புகார் வரும் வரை ஏறக்குறைய இடம் வாங்குவதற்காக மட்டும் ரூ.4.66 கோடி பணத்தை அனுப்பி வைத்துள்ளார் அவர். போலி சாமியாரும் ஆசிரமம் அமைத்ததாக தெரியவில்லை. இந்நிலையில் ராமதாஸ் புகார் கொடுக்க நாங்களும் வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை எடுத்துள்ளோம்." என்கின்றனர் சிவகங்கை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார்.

 

ராமதாஸின் புகாரின் பேரில் போலிச்சாமியார்  ரவி, அவரின் மனைவி புவனேஸ்வரி, உறவினர் மோதீஸ்வரன், அஷ்ரப்அலி (எ) அப்துல்அஜீஸ், பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜமாணிக்கம், சென்னையை சேர்ந்த தேவா (எ) பொன்னியப்பன் ஆகிய அறு பேர் மீது வழக்கு பதிவு செய்து ரவியை மட்டும் கைது செய்துள்ளனர் போலீசார். இதுபோல் திருச்சியை சேர்ந்த சுப்பரமணியனிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்ததாக தகவல் வர, அவரை வரவழைத்து அவர் கொடுத்த புகாரின் பேரிலும் ரவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலிச் சாமியாரை நம்பி வெளிநாடு வாழ் இந்தியர் ஒருவர் ரூ.4.66 கோடியை பறிகொடுத்துள்ள சம்பவம் சிவகங்கையில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கூகுள் மேப்பால் வழிமாறிய வடநாட்டு சாமியார்கள்; அதிர்ச்சியில் உறைந்த மணமேட்டுப்பட்டி

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
Northern preachers who were diverted by Google Maps; The public surrounded

தமிழகத்தில் குழந்தைகளை கடத்துவதற்காக வட மாநிலங்களில் இருந்து கும்பல்கள் கிளம்பி உள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவல்களை அடுத்து தமிழகத்தின் பல பகுதிகளில் ஆங்காங்கே வடமாநிலத்தவர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

சென்னை திருவண்ணாமலையின் செய்யாறு திண்டுக்கல் மாவட்டம் கொம்பேறிபட்டி, நாகை, கிருஷ்ணகிரி ராயக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் குழந்தைகள் கடத்த வந்ததாக வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. வதந்திகளை நம்ப வேண்டாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட போதிலும் இதுபோன்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் ராமேஸ்வரத்திற்கு சுவாமி தரிசனத்திற்கு வந்திருந்த வடமாநில சாமியார்கள் கூகுள் மேப் மூலம் சேலத்துக்கு செல்ல முயன்ற நிலையில் அவர்கள் வழி தவறி கிராமம் ஒன்றில் புகுந்துள்ளனர். இதனால் குழந்தைகள் கடத்த வந்த நபர்கள் என தகவல்கள் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து சேலத்திற்கு கூகுள் மேப் உதவியுடன் வடமாநில சாமியார்கள் பயணித்தபோது தவறுதலாக விராலிமலை-மணப்பாறை சாலையில் உள்ள மணமேட்டுப்பட்டி கிராமத்திற்குள் புகுந்துள்ளனர். கிராமத்துக்குள் வந்த அவர்கள் வழி தெரியாமல் அந்த வழியில் இருந்த சிறுவர்களிடம் வழி கேட்டுள்ளனர். இதனைப் பார்த்த அந்த கிராமப் மக்கள் கும்பலாக வந்துள்ள சாமியார்களை கண்டு அதிர்ந்து குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து அவர்களை மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீசில் ஒப்படைத்தனர். வடமாநில சாமியார்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமேஸ்வரம் சென்று விட்டு திரும்பி வந்தது தெரிய வந்தது. பின்னர் அவர்கள் பத்திரமாக சேலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

''அதிகாரத்தில் இருந்தால் இப்படி பேசலாமா?''-ஆளுநருக்கு வைகுண்டர் பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
NN

திருக்குறள் மொழிபெயர்ப்பு, சனாதானம் குறித்து அவ்வப்போது கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்குபவர் தமிழக ஆளுநர் ஆர்.என்ரவி. கோப்புகளுக்கு கையெழுத்திடாமல் இருப்பது உள்ளிட்டு பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழக அரசு ஆளுநர் மீது அடுக்கி வருகிறது. இதற்காக நீதிமன்றங்களில் வழக்கும் தொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆளுநர் உரைக்கும் சட்டப்பேரவைக்கும் ஏழாம் பொருத்தம் என்பதை போல் சட்டப்பேரவையில் சர்ச்சை நிகழ்வுகளும் நடந்து பரபரப்பாகி இருந்தது.

தமிழகத்தின் பல பகுதிகளுக்கு ஆன்மீக சுற்றுலாவாக செல்லும் பொழுதும், கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவிற்கு செல்லும் பொழுதும் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி காட்டும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில் அய்யா வைகுண்ட சுவாமி குறித்து அண்மையில் ஆளுநர் கூறியது கடும் கண்டனத்தை பெற்றுவருகிறது.

ஐயா வைகுண்டசாமியின் 192-வது அவதார தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. அப்பொழுது விழாவில் பேசிய ஆளுநர், 'ஐயா வைகுண்டர் சனாதனத்தை காக்க வந்தவர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் வைகுண்டர் தலைமை பதவி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ''புராணங்கள் புகுத்தப்பட்டுள்ளது என வைகுண்டர் சொல்லி இருக்கிறார். எல்லா புராணங்களிலும் வரலாறு திணிக்கப்பட்டிருக்கிறது. எனவே அவையெல்லாம் பொய்யானது. எனவே அதனை நம்பி இருக்காதீர்கள். நீங்கள் ஒரு புதிய சகாப்தத்திற்கு வாருங்கள். தெய்வத்தை உங்களுக்குள்ளே பாருங்கள் என கண்ணாடி வழிபாடு கொண்டுவந்தார்.

எங்களுக்கு உருவ வழிபாடு கிடையாது. அவரவர் தாய்மொழியில் அவரவர்கள் வழிபடுங்கள். அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும். வழி தேங்காயை எடுத்து தெரு பிள்ளையாருக்கு உடைப்பது போல் யாரும் செய்யக்கூடாது. உச்சபட்ச அதிகாரத்தில் இருப்பவர்கள் அரசியல் செய்ததை எதிர்த்தவர் வைகுண்டர். மனிதனுக்குள்ளையே சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் அவர்களுக்கு வேண்டிய சமூக நீதி கேட்டவர் வைகுண்டர். ஆளுநர் அவருடைய பெருமையை பேசி இருக்கலாமே? சனாதனம் என்று சொல்லக்கூடிய ஒரு மதத்திற்காக அந்த மதத்தில் இருக்கக்கூடிய ஜாதி, மனு தர்மம் இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியுமா? அய்யா வைகுண்டர் மனுதர்மத்துக்கு எதிராக போர்க்குரல் கொடுத்தவர். வரலாறு தெரியாதவர்கள் வாய் திறக்கக் கூடாது. எல்லாவற்றையும் தனதாக்கி பட்டா போடும் செயலை ஆளுநர் செய்யக்கூடாது '' என தெரிவித்துள்ளார்.