சிவகங்கை மாவட்ட சுற்றுலாத்துறையால் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் சுற்றுலாத்துறை நாள் கொண்டாடப்பட்டது. சுற்றுலாத் துறை நாளைக் கொண்டாடும் விதமாக ஆதிதிராவிட அரசு நலப்பள்ளி அதிகரம் மற்றும் மல்லல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஒருநாள் சுற்றுலாவாக திருமலை மற்றும் கீழடி அகழ்வாராய்ச்சித் தளம் மற்றும் அருங்காட்சியகம் ஆகிய இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
இந்நிகழ்வை மாவட்ட ஆட்சியர் திருமதி ஆஷா அஜித் இ.ஆ.ப அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். முதலில் சிவகங்கை நகரில் அமைந்துள்ள அரசு அருங்காட்சியகத்தை மாணவர்கள் பார்த்து மகிழ்ந்தனர், அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் தி.பக்கிரிசாமி முன்னின்று மாணவர்களுக்கு அருங்காட்சியக நடைமுறை குறித்து விளக்கினார்.
தமிழி எழுத்தைப் பார்த்து வியந்த மாணவர்கள்
சிவகங்கை மாவட்டத்தில் தொல்லியல் கருவூலமாக விளங்கும் திருமலையை மாணவர்கள் பார்வையிட்டனர். நான்காயிரம் ஆண்டு பழமையான செஞ்சாந்து ஓவியங்களைக் கண்டு மகிழ்ந்தனர், மேலும் சமணப் படுக்கை இயற்கை குகை முகப்புகளில் வெட்டப்பட்டிருந்த காடியில் எருக்காட்டூர் காவிதி கோன் கொறிய பாளிய் என்று எழுதப் பட்டிருந்த 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழி எனும் தமிழ் பிராமி எழுத்துகளைப் பார்த்து இந்த எழுத்துகளே நாம் இன்று எழுதுகிற எழுத்துகளின் முன்னெழுத்து முன்னோடி என்பதை அறிந்து, அதன் வரிவடிவம் அறிந்து வியந்தனர்.
ஆறாம் நூற்றாண்டு குடைவரைக் கோவில்
பாண்டியர்களால் பாண்டிய நாட்டில் பல்லவர்களுக்கு முன்பே குடைவரைக் கோவில் குடைவிக்கப்பட்டது ஆய்வுகளால் தெரிய வருகிறது. இவ்வாறாக திருமலையில் அமைந்துள்ள குடைவரைக் கோயில் ஆறாம் நூற்றாண்டு குடைவரையாக இருக்கலாம் என கருத முடிகிறது, 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரையைப் பார்த்து அதில் அமர்ந்த நிலையில் உள்ள சிவன் பார்வதி சிலைகளைப் பார்த்து களிப்படைந்தனர், மேலும் மலையின் மேலே இக்குடைவரையை ஒட்டியே பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கு முன்பாக கட்டப்பட்டுள்ள கற்றளி கோவிலில் மலைக்கொழுந்தீஸ்வரர் பாகம் பிரியாள் சன்னதிகளை வணங்கி சடையவர்ம குலசேகர பாண்டியன்,முதலாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், மாறவர்ம விக்ரமபாண்டியன், இரண்டாம் மாறவர்ம சுந்தரபாண்டியன், சடாவர்ம வீரபாண்டியன், சடயவர்ம பராக்கிரம பாண்டியன், திரிகோண சக்கரவர்த்திகள் கோனேரிமை கொண்டான் போன்ற மன்னர்களின் கல்வெட்டுகளைக் கண்டனர்.
நமது தாய்மடி கீழடி
அடுத்ததாக கீழடி சென்று திறந்த நிலையில் உள்ள ஏழாம் கட்ட அகழ்வாய்வுத் தளத்தை பார்வையிட்டதோடு கீழடி அருங்காட்சியகம் சென்று முன் பகுதியில் உள்ள விளக்க படங்களைப் பார்த்தபின் காட்சிக்கூடத்தில் ஒளிபரப்பாகும் காட்சியைக் கண்டு பண்டைய மனிதர்களின் வாழ்வை விளங்கிக் கொண்டு, பின்பகுதியில் அமைந்துள்ள ஒவ்வொரு காட்சிக்கூடமாக சென்றனர், கீழடி அகழாய்வு தளத்தில் கிடைக்கப்பெற்ற மாட்டின் எலும்பைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள மண் சுதை திமிலுடைய காளைச்சிற்பம், மற்றும் காணொளியாகக் காட்டப்படும் காளை ஒளிக் காட்சி.. கலம் செய் கோவே.. உழவும் தொழிலும், கடல் கடந்த வாழ்வியல், பல்வேறு வண்ண பாசிமணிகள்,முத்திரைகள்,காசுகள்,பானை ஓட்டுக் கீறல்கள் பானையில் எழுதப்பட்ட ஆதன், குவிரன் ஆதன் போன்ற சொற்கள், இந்தியாவிலே பழமையான கல்வெட்டாக கருதப்படும் தாதப்பட்டி நடுகல், ஆகியவற்றைப் பார்த்து கீழடி நம் தாய்மடி என்பதை உணர்ந்தனர்,
மேலும் தமிழி தொடுதிரை விளையாட்டை மகிழ்ச்சியுடன் விளையாடினர். இவர்கள் காணும் பகுதியை அவ்வப்போது ஆசிரியர் பயிற்றுநரும் தொல்லியல் ஆய்வாளருமான புலவர் கா. காளிராசா விளக்கிக்கூறினார். இந்த ஒரு நாள் சுற்றுலாவிற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர் அவர்கள் செய்திருந்தார்.