இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு தொடக்கப்பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு விரிவுபடுத்தியுள்ளது. விரிவுபடுத்தும் இந்த திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் படித்த அரசு நடுநிலைப் பள்ளியில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் 31 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 17 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் அமர்ந்து உணவு அருந்தினார்.
அதன் பின்னர் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், “பலரது மகிழ்ச்சிக்குக் காரணமாக நான் இருப்பதால் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அடுத்த மாதம் மற்றொரு கூடுதல் மகிழ்ச்சி காத்துக்கொண்டிருக்கிறது. அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்படவுள்ளது. அதனால் எனக்கு அதிக மகிழ்ச்சி ஏற்படப்போகிறது. இப்படி மகிழ்ச்சியையும், மனநிறைவையும் தரும் இந்த திராவிட மாடல் திட்டங்களில் மிக முக்கியமான திட்டம்தான் காலை உணவுத் திட்டம். கடந்த ஆண்டு பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் மதுரையில் உள்ள ஒரு மாநகராட்சியில் மாணவர்களுக்குக் காலை உணவுத் திட்டம் தொடங்கி வைத்தேன். அதை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்ற எண்ணம்தான் இன்று திருக்குவளையில் செயல் வடிவமாக்கப்பட்டு இருக்கிறது. ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே’ என்று மணிமேகலை காப்பியம் சொல்கிறது. அப்படி திமுக அரசு இன்றைக்கு உயிர் கொடுத்திருக்கிறது. இதற்கு நான் முதல்வராக மட்டுமில்லை, கலைஞரின் மகனாகவும் பெருமைப் படுகிறேன். இதை விட எனக்கு வேறு என்ன பெருமை வேண்டும்.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “திருக்குவளையின் இன்றைய காலை, வரலாற்றின் புதிய தொடக்கம். நீதிக்கட்சி ஆட்சி தொடங்கி 2021 வரை மதிய உணவுத் திட்டங்களே இருந்தன. நூறாண்டுகள் கடந்து காலை உணவுத் திட்டம் தொடங்கியுள்ளோம். முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கம் 17 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் பசியாற்றவுள்ளது. எனது அழைப்பை ஏற்று, தங்களது பகுதிகளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த மக்கள் பிரதிநிதிகள் அனைவருக்கும் நன்றி. பசிப்பிணி என்பதையே மாணவச் செல்வங்கள் அறியக்கூடாது. அறிவுப்பசி ஒன்றே அவர்களுக்கு வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.