Skip to main content

யோகா என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்!

Published on 08/08/2017 | Edited on 08/08/2017
யோகா என்ற பெயரில் மாணவிகளிடம் பாலியல் சில்மிஷம்: அரசுப்பள்ளி ஆசிரியர் சஸ்பென்ட்!

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் ஒன்றியம், கச்சுப்பள்ளியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 142 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப் பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியராக சுந்தரவடிவேல் உள்ளார். இவருடன் 12– ஆசிரியர் மற்றும் ஆசிரியைகள் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கு பணிபுரியும் அறிவியல் ஆசிரியர் அர்த்தனாரி என்பவர் எடப்பாடியில் உள்ள கவுண்டம்பட்டி பகுதியை சேந்தவர்.

இவர் மாணவ, மாணவிகளுக்கு அறிவியல் பாடம் நடத்துவதுடன், மாணவிகளுக்கு யோகா பாடம் நடத்துவதாக அவர்களை தனியாக அழைத்து உடற் பயிற்சிகளை சொல்லி கொடுத்து வருகிறார். கடந்த சில நாளாக, யோகா கற்று கொடுக்கிறேன் என்ற பெயரில், மாணவிகளுக்கு பாலியல் சில்மிஷம் செய்துள்ளார். வகுப்பிலுள்ள மாணவிகள் பாடத்தில் சந்தேகம் கேட்டால் அவர்களது தோளில் கைபோட்டபடி மாணவிகளுக்கு விளக்கம் அளித்துக் கொண்டே அவர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து, சில மாணவிகள் தங்களது பெற்றோர்களிடம் புகார் தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து பெற்றோர்கள் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்து, அந்த ஆசிரியரை கண்டித்துள்ளனர். இந்த நிலையில், நேற்று முன்தினம், மாணவிகள் கழிவறைக்கு செல்லும்போது கதவை திறந்து வைத்து விட்டுத்தான் செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

இதையறிந்த நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் நேற்று காலை பள்ளியை முற்றுகையிட்டு, அந்த ஆசிரியர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து, தலைமையாசிரியர் சுந்தர வடிவேல் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார். ஆனாலும், இரண்டு மணி நேரமாகியும் எந்த அதிகாரியும் வராததால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் கொங்கணாபுரம் – ஓமலூர் சாலியில் திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

இதையறிந்த மகுடஞ்சாவடி போலீசார் அங்கு வந்து போதுமகளுடன் பேச்சு வார்த்தை மேற்கொண்டனர். பின்னர், அங்கு வந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி மற்றும் வட்டார தொடக்க கல்வி அலுவலர் செல்வராஜ் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிகள், பெற்றோகள் மற்றும் ஆசிரியர்களிடம் தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை முடிவில், நேற்று மாலை அறிவியல் ஆசிரியர் அர்த்தனாரியை சஸ்பென்ட் செய்து முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி உத்தரவிட்டுள்ளார்.

- பெ.சிவசுப்பிரமணியம்

சார்ந்த செய்திகள்