கோவை மாவட்டம் பீளமேடு பகுதியில் தனியார் உயர்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப் பகுதியில் பிரபலமான இந்தப் பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். அதே நேரம், இந்தப் பள்ளியில் முக்கிய விதி ஒன்று பின்பற்றப்படுகிறது. அதில், இங்கு படிக்கும் மாணவர்கள் கட்டாயம் ஆங்கில மொழியில் தான் பேச வேண்டும். அப்படி மாறாக தமிழில் பேசினால் அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், பீளமேடு பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் இந்தப் பள்ளியில் 6 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்த மாணவி தன்னுடைய பள்ளித் தோழிகளுடன் உணவு அருந்தும் இடத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அந்தச் சமயம், மாணவியுடன் ஆசிரியரின் மகளும் இருந்துள்ளார். அப்போது, அங்கிருந்த மாணவர் ஒருவர், "நீ பாக்க என்னோட தங்கச்சி மாதிரியே இருக்க" என கூறியுள்ளார்.
அதற்கு, அந்த ஆசிரியரின் மகள் உன்னோட தங்கச்சி பேர் என்ன?" எனக் கேட்டுள்ளார். அந்த மாணவனும் கூறியுள்ளார். இதற்கிடையில், அங்கிருந்த மூன்று மாணவர்களும் தமிழில் பேசியதாகக் கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த ஆசிரியர் ஒருவர் அங்கிருந்த ஒரு மாணவியை மட்டும் கடுமையாகத் திட்டியதாகச் சொல்லப்படுகிறது. அதுமட்டுமின்றி, அந்த மாணவிக்கு பிளாக் மார்க் போட்டுவிட்டு நூறு ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
அதேநேரம், அபராதம் விதித்த ஆசிரியரிடம் அந்த மாணவி டியூசன் படித்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி டியூசன் செல்வதைப் பாதியில் நிறுத்தியதால் ஆசிரியருக்குக் கோபம் ஏற்பட்டுள்ளது. மேலும், இதனால் ஆத்திரமடைந்து மாணவியிடம் தொடர்ந்து கடுமையாக நடந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவி இச்சம்பவத்தைத் தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். ஆரம்பத்தில் இதில் அலட்சியம் காட்டிய பெற்றோர் இந்த விவகாரத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை எனச் சொல்லப்படுகிறது.
இத்தகைய சூழலில், தன்னிடம் அந்த ஆசிரியர் கடுமையாக நடந்துகொள்வதாகவும், அபராதம் கேட்டு மிரட்டுவதாகவும் கூறி அழுதுள்ளார். ஒருகட்டத்தில், அதிர்ச்சியடைந்த மாணவியின் தாய் இது குறித்துப் பள்ளி நிர்வாகத்திடம் கேள்வி கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அங்கிருந்து எந்தப் பதிலும் சரியாகக் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் இச்சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் நடந்தவற்றை விவரமாகக் கூறிய அவர், டியூசனை பாதியில் நிறுத்திய தனது மகளை பழிவாங்குவதற்காக ஆசிரியர் கடுமையாக நடந்து கொள்வதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. அதே சமயம், ஆசிரியரின் இந்தச் செயலுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது போன்ற ஆசிரியர்கள் மீது அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குழந்தைகள் மனதில் ஏற்படும் தேவையற்ற எண்ணங்களில் இருந்து பாதுகாக்க முடியும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது, இச்சம்பவம் கோவை மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.