பள்ளி மாணவர்கள் கொலை மிரட்டல் விடுவதால் பாதுகாப்புக்கோரி ஆசிரியர்கள் தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினார்கள்.
தேனி மாவட்டத்தில் உள்ள தேவாரம், தேவதானப்பட்டி, ஜி.கல்லுப்பட்டி ஆகிய பகுதிகளில் இருக்கும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களை மாணவர்கள் தாக்குவதாகக் கூறி ஆசிரியர் சங்க கூட்டமைப்பினர் நேற்று மாலை தேனி முதன்மைக் கல்வி அலுவலகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது சம்பந்தமாக ஆசிரியர்களிடம் கேட்டபோது, “தேவாரம் பள்ளியில், மாணவரைப் புத்தகம் கொண்டுவரச் சொல்லிய ஆங்கில ஆசிரியரை மாணவர் தாக்கியுள்ளார். அதேபோல், ஜி. கல்லுப்பட்டியில் மாணவர்கள் குழுவாக ஆசிரியர்களைக் கிண்டல் செய்துள்ளனர். இது பற்றி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தேவதானப்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம் மாணவர் ஒருவர் கத்தியுடன் வகுப்புக்கு வந்து ஆசிரியரைக் குத்த முயன்றுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளித்து டி.எஸ்.பி. மாணவரை விசாரித்துள்ளார். இந்த நிலையில், மீண்டும் அந்த மாணவர் கத்தியுடன் பள்ளிக்கு வந்துள்ளார். அங்கு போலீசார் முன்னிலையில் ஆசிரியர்களைக் கத்தியால் குத்திக்கொலை செய்யாமல் விடமாட்டேன் என மிரட்டியுள்ளார். அதைக் கண்டு ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து விட்டனர்.
இந்த நிலையில்தான் தேனியில் உள்ள மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் முற்றுகையிட்டு பாதுகாப்பு கொடுக்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இது மட்டுமல்லாமல் சி.இ.ஓ.விடம் புகார் மனுக்களை கொடுத்துள்ளனர். மாணவர்கள், ஆசிரியர்களைத் தொடர்ந்து மிரட்டும் நிலை ஏற்பட்டால் மாவட்டத்தில் உள்ள ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் இணைந்து போராட்டத்தில் குதிக்க தயாராகியும் வருகிறார்கள்” என்றனர்.