வேலூரில், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் க. அன்பழகன் தலைமையிலான சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு, வேலூர் மாவட்டத்தில் நடைபெறும் அரசின் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடர்பாக இன்று ஆய்வு மேற்கொண்டது.
தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மதிப்பீட்டுக் குழு ஆய்வில், பள்ளியில் சுகாதாரமில்லாமல் இருப்பதும் பள்ளி மாணவர்கள் காலணிகளை வெளியே விட்டுவிட்டு வகுப்பறைக்குள் அமர்ந்து இருப்பதைக் கண்ட குழு தலைவர் அன்பழகன், ஏன் காலணி இல்லாமல் அமர்ந்து இருக்கிறீர்கள் என மாணவர்களிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு மாணவர்கள், சுத்தமாக இருக்க வேண்டும் எனப் பதிலளித்தனர். “அப்படியானால் ஆசிரியரும் காலணி இல்லாமல் தானே இருக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பிய அன்பழகன், மாணவர்கள் காலணி அணிய வேண்டும். இல்லையெனில் நோய்த் தொற்றுகள் ஏற்படும். இதனால் மாணவர்களுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்படும், அதுமட்டுமின்றி சுயமரியாதையை மாணவர்கள் இழக்க நேரிடுவார்கள். மாணவர்கள் சுய மரியாதையுடன் இருக்க வேண்டும். ஆகவே காலணி அணிந்து வகுப்பறையில் அமர வேண்டும்” என வகுப்பு ஆசிரியருக்கு அறிவுரை வழங்கிவிட்டு, மாணவர்களை அவர் கண் முன்னே காலணி அணிந்து வரச் சொல்லி கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.