மதுரை மாநகரின் ரயில்வே நிலையத்திற்கு அருகே அமைந்துள்ளது பெரியார் பேருந்து நிலையம். மிக முக்கியமான இந்த பேருந்து நிலையத்தில் இருந்து உள்ளூர் மற்றும் வெளியூர் செல்வதற்காக ஏராளமான அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் பெரியார் பேருந்து நிலையத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வது வழக்கம்.
அந்த வகையில், இன்று காலை 10 மணியளவில் சோழவந்தான் அருகே உள்ள தாராபட்டி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரும், காரியாபட்டியைச் சேர்ந்த கருப்பையா என்பவரும் வேலை நிமித்தமாக வெளியூர் செல்வதற்காக பெரியார் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளனர். அப்போது, அவர்கள் தாங்கள் செல்லவேண்டிய பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்தனர். ஆனால், பேருந்து வருவதற்கு சிறிது தாமதமானதால் ரவியும் கருப்பையாவும் தங்களுடைய செல்போனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, அந்த இடத்தில் இருந்த வடமாநில இளைஞர்கள் சிலர் அவர்களை நோட்டமிட்டதாக சொல்லப்படுகிறது. இத்தகைய சூழலில், அந்த வடமாநில இளைஞர்கள் யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென ரவி மற்றும் கருப்பையா ஆகியோர் கையில் வைத்திருந்த செல்போன்களை கண்ணிமைக்கும் நேரத்தில் பிடுங்கிக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த ரவி மற்றும் கருப்பையா ஆகியோர் திருடன் திருடன் என கத்தி கூச்சலிட்டனர். அந்த சமயம், பஸ் ஸ்டாண்டில் இருந்த அங்கிருந்த பொதுமக்கள், மாணவர்கள் என அனைவரும் திருடர்களை விரட்டிச் சென்றனர். இத்தகைய சூழலில், தப்பியோடிய வடமாநில கும்பலில் இருந்து ஒருவன் மட்டும் பொதுமக்களிடம் சிக்கிக்கொண்டான். அந்த இளைஞரை எல்லீஸ் நகர் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரட்டிப்பிடித்த பொதுமக்கள், அந்த வடமாநில இளைஞரை அங்கிருந்து தர்ம அடி கொடுத்துக்கொண்டே பெரியார் பேருந்து நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து, பொதுமக்களிடம் தர்ம அடி வாங்கிக்கொண்டிருந்த இளைஞரை மீட்டு அங்கிருந்தவர்கள் திடீர் நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது, அந்த இளைஞரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சஞ்சான் என்பது தெரியவந்தது. மேலும், செல்போன் பறிக்க அவருடன் மேலும் 4 பேர் வந்ததாக தெரிகிறது. அவர்கள் யார்? என்பது தொடர்பாகவும், வேறு இடங்களில் கைவரிசை காட்டியுள்ளார்களா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது, மக்கள் நடமாட்டம் மிகுந்த பெரியார் பேருந்து நிலையத்தில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.