சிதம்பரம் காவல்துறை உதவி ஆய்வாளர் நாகராஜன் மற்றும் காவல்துறையினர் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் மாலை நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பள்ளி, கல்லூரி நேரம் முடிந்து பேருந்து நிலையத்திற்கு வந்த மாணவர்களில் பலர் அதிக முடியுடன் காணப்பட்டனர். இந்த தோற்றம் மாணவர்கள் போல் இல்லாமல் வேறுவிதமாக இருந்தது. மேலும் சிலர் அவர்களின் தலை முடியில் கலர் சாயம் பூசியும், காதுகளில் கடுக்கன் மற்றும் தோடுகளை அணிந்திருந்தனர். இவர்களை அழைத்த காவல்துறையினர் இதுகுறித்து பேசினர்.
அப்போது மாணவர்கள் இது 'புள்ளிங்கோ' ஸ்டைல் எனக் கூறினர். இதனால் காவலர்கள் மாணவர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என அறிவுரை கூறி, பேருந்து நிலையத்திலேயே அவர்களை அமர வைத்து, பேருந்து நிலையத்தில் சலூன் கடை நடத்திவரும் ஸ்ரீதர் என்பவரை அழைத்து தலையில் அதிக முடியுடன் இருந்த மாணவர்களுக்கு முடியை ஒட்ட வெட்டி விட்டனர். மேலும் பொது இடங்களுக்கும், பேருந்து நிலையம், பள்ளிகளுக்கு வரும்போது முடியை வெட்டி விட்டு வர வேண்டும் என்றும், மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கினர். அதேபோல் பேருந்துகளில் பயணம் செய்த மாணவர்களிடம் அவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இது பேருந்து நிலையத்திலிருந்த பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.