மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் மதுரை மாவட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் ரத்த தான விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியம், மூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த மாரத்தான் போட்டி மதுரை மருத்துவக் கல்லூரியில் தொடங்கி 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்றது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த மாணவர் தினேஷ் கலந்துகொண்டார்.
மாரத்தான் ஓடி முடிந்த 1 மணி நேரம் கழித்து மாணவர் தினேஷ் குமாருக்கு வலிப்பு ஏற்பட்டது, அதனையடுத்து மாணவர் தினேஷை உடனடியாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தினேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விளக்கமளித்த அரசு ராஜாஜி மருத்துவமனை டீன், “ மாணவர் தினேஷ், மாரத்தான் முடிந்து 1 மணி நேரத்திற்கு மேலாக சக கல்லூரி மாணவர்களுடன் இயல்பாகவே இருந்துள்ளார். அதன் பிறகே மாணவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு ராஜாஜி மருத்துவமனையில் காலை 8.45 மணிக்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தினேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவரின் இதயத்துடிப்பு மற்றும் இரத்த அழுத்தம் மிகக்குறைவாக இருந்தது, சுய நினைவு திரும்பவே இல்லை; காலை 10.10 மணிக்கு திடீர் இதய அடைப்பு ஏற்பட்டு, 10.45 மணிக்கு உயிர் பிரிந்தது” எனத் தெரிவித்துள்ளார்.