சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அடுத்துள்ள கல்பாரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் அமுதா. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 574 மதிப்பெண் பெற்று பள்ளியிலேயே முதலிடம் பிடித்தார்.
விசைத்தறி தொழிலாளியான இவரது தந்தை வெங்கடாசலம், தாய் மாரியம்மாள், சகோதரி பூங்கொடி ஆகிய 3 பேரும் கடந்த ஆறாம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தனர். இந்த மிகப்பெரும் சோகத்தை தாங்க முடியாத மாணவி தன்னுடைய படிப்பை தொடர முடியாமல் தவித்து வந்தார். விபத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தந்தை வெங்கடாசலம் திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் அமுதாவை சேர்ப்பதற்காக 2500 ரூபாய் கட்டியிருந்த நிலையில் மாணவி வாழ்வில் எதிர்பாராத திருப்பமாக இந்த பெரும் சோகம் நிகழ்ந்தது. இந்த நிலையில் சமூக ஊடகங்கள் வழியாக தன்னுடைய படிப்புக்கு உதவுமாறும் மாணவி கோரிக்கை வைத்திருந்தார்.
இந்நிலையில் பல்வேறு தரப்புகளிலிருந்து அமுதாவிற்கு உதவிகள் குவிந்து வருகிறது. திமுகவின் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தருண் உள்ளிட்ட திமுகவினர் சிலரும், அதேபோல் இசையமைப்பாளர் இமான் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் மாணவியின் கல்விக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர்.