நெல்லை மாவட்டம் களக்காடு நகரின் ஒதுக்குப்புறமுள்ள ராஜாஜிபுரத்தில் குடியிருப்பவர் நம்பிராஜன்(30), சங்கரி(26) தம்பதியர். திருமணத்திற்குப் பின்பு நம்பிராஜன் தன் தந்தை மற்றும் சகோதரி குடும்பத்துடன் வசித்து வருகிறார். மேலும் சென்னையில் வேலை பார்த்து வரும் நம்பிராஜன், அவ்வப்போது ஊருக்கு வருவது வழக்கம், இவர்களுக்கு, 3 வயதில் முத்து வர்ஷினி என்ற பெண் குழந்தையும், முத்து அஜித் என்ற நான்கு மாத குழந்தையும் இருக்கிறது.
இதனிடையே சங்கரிக்கு மனநோய் ஏற்பட்டு, கடந்த சில மாதங்களாகவே நெல்லையில் சிகிச்சை எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தச் சூழலில் காலை சுமார் ஒன்பது மணியளவில் வீட்டார். சகோதரி பீடி சுற்றும் கடைக்குச் சென்ற நேரத்தில், தனது இரண்டு குழந்தைகளையும் பாத்ரூமிற்கு குளிப்பாட்ட அழைத்துச் சென்றிருக்கிறாள் சங்கரி. அப்போது என்ன நடந்தது என்று தெரியவில்லையாம். தண்ணீர் தொட்டியில் இரண்டு பிள்ளைகளையும் அமுக்கியிருக்கிறாள். அதில் மூச்சுத் திணறி இரண்டு குழந்தைகளும் இறந்திருக்கின்றன. வீடு திரும்பிய, நம்பிராஜனின் சகோதரியிடம், சங்கரி, இதைச்சொல்ல, பதறிப்போனவர் சென்று பார்த்த போது இரண்டு குழந்தைகளும் இறந்தது தெரிய வந்திருக்கிறது.
தகவலறிந்த களக்காடு காவல் நிலைய ஆய்வாளர் மேரிஜமீதா, இரண்டு பிள்ளைகளின் உடல்களைக் கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பியவர் மேல் விசாரணை நடத்தி வருகிறார். பெற்றவளே குழந்தைங்களை தண்ணீர்ல் அமுக்கிக் கொன்ற சம்பவம் களக்காட்டைப் பரபரப்பாக்கியிருக்கிறது.