புதுச்சேரி உழவர்கரை பகுதியை சார்ந்த பெருமாள் என்பவர் அதே பகுதியில் அமுதா பேக்கரி எனும் கடை நடத்தி வருகின்றார். இந்த பேக்கரியில் வைத்திருந்த ரூ. 4,00,000 மற்றும் ஒரு சவரன் தங்க நகையை கடந்த 17.04.2019 அன்று காணவில்லை. அதனை தொடர்ந்து கடந்த 3.05.19 அன்றும் 1,78,000 ரூ பணத்தையும் யாரோ பேக்கரியின் உள்ளே நுழைத்து திருடியுள்ளதாக ரெட்டியார்பாளையம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
அதனடிப்படையில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஒரு குழு அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், பழக்கத்தின் மூலம் பேக்கரிக்கு அடிக்கடி வரும் சிலரிடம் விசாரணை செய்யும் போது சந்தேகத்தின் பேரில் மதியழகன் என்பவரை பிடித்து காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் கடையின் மேற்கூரையை பிரித்து 2 முறை திருடியதாக மதியழகன் ஒப்புக்கொண்டார். மேலும் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கும், காதலிக்கு நகை வாங்கி கொடுக்கவும் திருடியதை மதியழகன் ஒப்புக்கொண்டார். அதன்பின்னர் பேக்கரியில் இருந்து திருடிய பணத்தில் வாங்கிய 1,54,000 மதிப்பிலான புதிய R1 யமாஹா பைக்கையும், 6 பவுன் தங்க நகைகள், மற்றும் ரொக்கம் 2,08,000 பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல் புதுச்சேரியில் கடந்த 2015 -ஆம் ஆண்டு, காமராஜர் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திருடப்பட்ட வழக்கில் கோட்டக்குப்பம் சசிக்குமார் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் திருநெல்வேலியை சேர்ந்த தினகரன் மற்றும் திருவாரூரைச் சேர்ந்த சுரேஷ் ஆகியோருடன் சேர்ந்து கார் திருட்டில் ஈடுப்பட்டு வந்தது தெரியவந்தது. அதையடுத்து சுரேஷ் மற்றும் தினகரனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். மேலும் கடந்த 2017 -ஆம் ஆண்டு லாஸ்பேட்டையில் கார் திருட்டு, கோரிமேடு சிவாஜி நகரில் கடந்த பிப்ரவரி 7 ம் தேதி செவிலியர் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த கார் திருட்டு ஆகியவற்றிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் சென்னை போலீசாரிடம் சிக்கிய தினகரனை கோரிமேடு போலீசார் காவலில் எடுத்து விசாரித்ததில் கோரிமேட்டில் கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி கார் திருடியதும், மேலும் புதுச்சேரியில் மூன்று இடங்களில் திருடியதும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் தினகரன் வீடுகளில் திருட போகும்போது அங்குள்ள காரையும் சேர்த்து திருடி செல்வதும், ஒரு இடத்தில் திருடும் காரை கொண்டு சென்று வேறு ஒரு ஊரில் திருட்டில் ஈடுபட்டுவிட்டு அங்கே அந்த காரை நிறுத்திவிட்டு தப்பி செல்வதும் தினகரன் கும்பலுக்கு வழக்கமாக இருந்துள்ளது
இந்த தினகரன் மீது தமிழகம், ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 6 மாநிலங்களில் ஏராளமான திருட்டு வழக்குகள் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.