கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் வீராணம் ஏரியின் மூலம் பாசனம் பெற்று 15000 ஏக்கருக்கு மேல் சம்பா நெல் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாராக இருந்த போது விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் வலியுறுத்திய போது மாவட்ட ஆட்சியர் தனியார் நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் மற்றும் வேளாண் துறை அலுவலர்களையும் அழைத்து விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரத்தை ஒரு மணி நேரத்திற்கு டயருடன் கூடிய அறுவடைக்கு ரூ 1200 முதல் 1300 வரையும், பெல்ட் போட்ட நெல் அறுவடை இயந்திரத்திற்கு 1500 லிருந்து 1800 வரை கூலி நிர்ணயம் செய்து உத்தரவிட்டார்.
பின்னர் இதனை அவரது அறிக்கையாகவும் வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட வேளாண்துறை துறை அதிகாரிகள் சரியான முறையில் விவசாயிகளுக்கு நெல் அறுவடை இயந்திரங்களை ஏற்பாடு செய்து கொடுக்காததால் நெல் அறுவடைக்கு முன் விதைத்த உளுந்து செடிகள் வளர்ந்து இயந்திரத்தின் மூலம் நெல் அறுவடை செய்யும்போது உளுந்து செடிகள் வீணாகி உள்ளது.
மேலும் நெல் அறுவடை இயந்திரம் சரியான நேரத்தில் கிடைக்காததால் அறுவடை செய்ய தயாரான நிலையில் காலதாமதத்தால் நெல் மணிகள் உதிர்ந்து விட்டது. கொஞ்ச நெஞ்சம் இருந்த நெற்கதிர்களை அறுக்க ஒரு மணி நேரத்திற்கு ரூபாய் 3000 வரை தனியார் நெல் அறுவடை இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் அறுவடையை செய்து வருகிறார்கள். பாடுபட்டு பயிரிட்ட நெல்லை அறுவடை செய்ய மணிக்கு 3000 ஆயிரம் ரூபாய் செலவு செய்யவேண்டியுள்ளது. இது பலவிதத்தில் வேதனையுடன் மன உளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது எனக்கூறினர் விவசாயிகள்.
இந்நிலையில் காட்டுமன்னார்கோவில் அருகே நங்குடி என்ற கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று விவசாயிகளுக்கு குறைந்த கட்டணத்தில் நெல் அறுவடை செய்வதற்கு மானியத்துடன் கடன் பெற்று 10- க்கும் மேற்பட்ட நெல் அறுவடை இயந்திரங்களை வைத்துள்ளது. அவர்களும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட தொகையை வசூலிக்காமல் விவசாயிகளிடம் ரூ 3000 வரை ஒரு மணி நேரத்துக்கு நெல் அறுவடை செய்ய வசூலித்ததாக வீராணம் ஏரியின் பாசன விவசாயிகள் சங்க தலைவர் பாலு குற்றம் சாட்டுகிறார்.
எனவே இதுபோன்ற காலங்களில் விவசாய பொறியியல் துறை அதிகாரிகள் மற்ற மாவட்டங்களில் உள்ள நெல் அறுவடை இயந்திரங்களை தேவைப்படும் இடத்திற்கு வரவழைத்து டெல்டாபகுதி விவசாயிகளுக்கு உதவ வேண்டும். ஆனால் இதுபோன்று வரும் காலங்களில் நெல் அறுவடை இயந்திரத்திற்கு தட்டுப்பாடு இல்லாமல் அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும் என கோரிக்கைவிடுத்துள்ளார்.