அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரில் அரசு கலை அறிவியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். கள்ளக்குறிச்சி அருகில் உள்ள கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வந்த மாணவி மரணமடைந்தது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி மிகப்பெரிய போராட்டம் நடந்தது. அப்போது ஏற்பட்ட கலவரத்தில் பள்ளி கட்டடம் மற்றும் பேருந்து உட்பட பொருட்களுக்கு தீவைக்கப்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டது. அதன்பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஜெயங்கொண்டம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் மாணவ மாணவிகள் ஒன்றிணைந்து மாணவி மரணத்திற்கு நீதி கேட்டு துண்டு நோட்டீஸ் வழங்கி கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் டி.எஸ்.பி. கலைகதிரவன் மற்றும் போலீசார் கல்லூரி வளாகத்திற்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது காவல்துறை தரப்பில், ‘சின்ன சேலம் பள்ளியில் இறந்த மாணவி மரணம் குறித்து காவல்துறையின் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. இது குறித்து பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ மாணவிகள் போராட்டத்தில் இறங்கினால் அவர்களை கைது செய்யுமாறு அரசு தெரிவித்துள்ளது. எனவே நீங்கள் போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்கு திரும்ப வேண்டும். மீறி போராட்டம் நடத்தினால் அனைவரும் கைது செய்யப்படுவீர்கள். கைது செய்யப்பட்டால் வழக்கு சிறை என உங்கள் வாழ்க்கை வீணாகும். எனவே போராட்டங்களை கைவிட்டு படிக்க வேண்டும்” என்று அறிவுரை கூறினார். அதையடுத்து மாணவ மாணவிகள் வகுப்பறைக்குச் சென்றனர்.