இந்தியன் ஆயில் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் போராட்டம்
தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவன ஒப்பந்த ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆயில் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். தண்டையார்பேட்டை பரமேஸ்வரன் நகரில் இந்தியன் ஆயில் நிறுவனம் உள்ளது. இங்கு, மணலி சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட ஆயில் கொண்டு வந்து பேரல், கேன்களில் அடைத்து வெளி மாநிலம், வெளியூர்களில் உள்ள அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகிறது. இங்கு நிரந்தர தொழிலாளர்களாக 80 பேரும், ஒப்பந்த தொழிலாளர்களாக 120 பேரும் பணியாற்றி வருகின்றனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இங்கு பணியாற்றிய ஒப்பந்த ஊழியர்கள் 2 பேர் இறந்துவிட்டனர். இவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. பிறகு பேச்சுவார்த்தைக்கு பின் பணிக்கு திரும்பினர்.
இதனிடையே, ஒப்பந்த தொழிலாளர்களின் கான்ட்ராக்டர்கள் கிருஷ்ணகுமார், கண்ணுசாமி ஆகியோரிடம், ஒப்பந்த தொழிலாளர்கள் இனிவரும் காலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடமாட்டோம் என எழுதி கொடுக்கும்படி நிர்வாகம் கூறியுள்ளது. இதை ஏற்காத ஒப்பந்த ஊழியர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் நேற்று காலை இந்தியன் ஆயில் நிறுவன நுழைவாயில் முன்பு திரண்டு வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நிறுவனத்தை கண்டித்து பல்வேறு கோஷங்களை எழுப்பினர். ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லவேண்டிய லூப் ஆயில் லாரியில் ஏற்றப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக, ஒப்பந்த ஊழியர்களின் சங்கமான எச்எம்எஸ் சங்க நிர்வாகிகளுடன் இந்தியன் ஆயில் நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தண்டையார்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.