தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலர்களின் சொத்து விவரங்களை ஆய்வு செய்ய போக்குவரத்து துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஓட்டுநர் உரிமம் பெற மின்னனு ஓட்டுநர் தேர்வு முறையை தமிழக அரசு செயல்படுத்த உள்ளது. இதற்கு தடை விதிக்க கோரியும், ஓட்டுநர் உரிமம் பெற பழைய முறையை தொடர்ந்து செயல்படுத்த கோரியும் தென்னிந்திய ஓட்டுநர் பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம், தற்போது முறையாக வாகனம் ஓட்ட தெரியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், இதை முறைப்படுத்த புதிய மின்னனு ஓட்டுநர் உரிமம் தேர்வு முறை அவசியமானது என்றும் அதை உடனடியாக அமல்படுத்த வேண்டுமென தெரிவித்தார்.
பெரும்பான்மையான மக்கள் ஓட்டுநர் உரிமம் பெற ஓட்டுநர் பள்ளிகளின் மூலம் விண்ணப்பிக்கின்றனர். இதில் பலர் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் மூலம் முறைகேடாக ஓட்டுநர் உரிமம் பெறுகின்றனர்.
இதனால், தமிழகத்தில் உள்ள அனைத்து வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் ஒரு வார காலத்திற்குள் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும். வட்டார அலுவலகங்களில் ஒரு வாரத்திற்கும் மேலாக காமிரா செயல்படாமல் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
மேலும், லஞ்ச ஒழிப்பு துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் திடீர் ஆய்வு நடத்த வேண்டும். வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் ஓட்டுநர் பயிற்சி பள்ளியை சேர்ந்தவர்கள் அவசியமில்லாமல் வந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வட்டார போக்குவரத்து அலுவலர்களின் தற்போதுள்ள சொத்து விவரத்தை பெற்று ஆய்வு செய்ய வேண்டும் என போக்குவரத்து துறை செயலாளருக்கு உத்தரவிட்ட நீதிபதி, 4 வார காலத்திற்குள் வழக்கு குறித்த நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.