பழனி மலை அடிவாரத்தில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் வணிக கடைகள் அகற்றப்பட்டு வருகின்றன. மேலும் கிரிவலப் பாதையில் தனியார் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து தேவஸ்தான நிர்வாகம் பழனி நகரில் வசிக்கும் மக்களுக்கும் வணிகர்களுக்கும் இடையூறு செய்வதை கண்டித்து பழனி நகர் மன்றம் இன்று கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
அதை தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்களின் அழைப்பை ஏற்று வணிகர் சங்கங்கள் கடையடைப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கடைகளை அடைத்துள்ளனர். பேருந்து நிலையம், காந்தி மார்க்கெட், ரயில்வே சாலை , சன்னதி வீதி உள்ளிட்ட நகரில் அனைத்து இடங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. மேலும் உணவுகள், தங்கும் விடுதிகள், இயங்காததால் வெளியூரிலிருந்து பழனி முருகன் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பலரும் சிரமம் அடைந்துள்ளனர். காலை 6:00 மணி முதல் மாலை 6 மணி வரை கடை அடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்தப்பட்டுள்ளது. அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தேவஸ்தான நிர்வாகம் பழனி நகர மக்கள் மற்றும் வணிகர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கவன ஈர்ப்பு போராட்டம் இன்று நடைபெற்ற வருகிறது.
இந்த நிலையில் பழனி முருகன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மலையடி வாரத்தில் பிரட், பிஸ்கட், பழங்கள், குழந்தைகளுக்கு தேவையான பால் ஆகியவற்றை விலை இல்லாமல் வழங்கவும் கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. பழனி கோயில் தேவஸ்தான நிர்வாகத்தை எதிர்த்து நகர மன்றம் சார்பில் நடத்தப்படும் கடையடைப்பு போராட்டத்தால் பழனியில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு பழனி முருகனை தரிசிக்க வரும் பக்தர்களும் பாதிப்படைந்து வருகிறார்கள்.