18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளன.
இத்தகைய சூழலில் சில தினங்களுக்கு முன்பு நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதீத வெப்பம் காரணமாக கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தச் சர்ச்சை ஓய்வதற்குள் கடந்த 28/04/2024 அன்று ஈரோட்டில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் நள்ளிரவில் சிசிடிவி கேமரா பழுதானதால் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் இன்று (29.04.2024) அதிகாலை 3.30 மணியளவில் வேறு கேமராக்கள் பொறுத்தப்பட்டன.
இந்நிலையில் தென்காசியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் சுமார் 30 நிமிடங்கள் செயலிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தனியார் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் உள்ள ஸ்ட்ராங் ரூமில் கேமராக்கள் செயல் இழந்த நிலையில் கோளாறு சரி செய்யப்பட்டு மீண்டும் கேமராக்கள் இயங்கத் தொடங்கியது. அந்தப் பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக ஸ்ட்ராங் ரூமில் உள்ள சிசிடிவி கேமராக்கள் செயலிழந்து இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டு சென்றுள்ளார்.