கடலூரில் குறுவை சாகுபடி தொகுப்பு திட்டம் விவசாயிகளுக்கு வழங்கி துவக்கி வைக்கப்பட்டது. தமிழ்நாடு அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறுவை சாகுபடி தொகுப்புகளை விவசாயிகளுக்கு வழங்கினார். பின்னர் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட கனிம அறக்கட்டளை நிதி குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வுகளில் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், சட்டமன்ற உறுப்பினர்கள் நெய்வேலி சபா. ராஜேந்திரன், பண்ருட்டி தி. வேல்முருகன், காட்டுமன்னார்குடி ம.செ. சிந்தனைச் செல்வன், விருத்தாசலம் இரா. ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள், பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், “மேட்டூர் அணை திட்டமிட்டபடி திறக்கப்பட்டுள்ளது. மேட்டூரில் தண்ணீர் திறப்பதற்கு முன்பாகவே தூர்வாரும் பணிகள் கடைமடை வரை முடிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில் 2.5 லட்சம் ஏக்கருக்கு தேவையான ரசாயன உரங்கள் முழு மானியத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு லட்சத்து 24 ஆயிரம் ஏக்கருக்கு விதைகள் 50% மானியத்தில் வழங்க 75.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு குறுவை சாகுபடி அதிகரித்து 5 லட்சம் ஏக்கர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறுவை சாகுபடி நடவுப் பணி கிட்டத்தட்ட 3.5 லட்சம் ஏக்கருக்கு மேல் நடந்து கொண்டிருக்கிறது. நடவுப் பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை காரணமாக இயந்திரங்கள் பயன்பாடு அதிகரித்து வருகிறது.
இதனைக் கருத்தில் கொண்டு இயந்திர நடவிற்கு வேளாண்துறை சார்பில் உரிய கருவிகள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. எந்திரம் மூலம் நடவு செய்தால் விதையின் தேவை குறையும்; மேலும் செலவும் குறைவாகும். கர்நாடகாவில் இருந்து பாசனத்திற்கு காவிரி தண்ணீர் பெறும் வேலையைத் தமிழக முதலமைச்சர் எடுத்து வருகிறார். அதேபோன்று கர்நாடகம் தர வேண்டிய தண்ணீரை கேட்டுப் பெற வேண்டிய உரிமை நமக்கு இருக்கிறது. மழையின் காரணமாக வரத்து குறைவால் காய்கறி விலைகள் உயர்ந்துள்ளன. அடுத்த கட்டமாக அனைத்து காலங்களிலும் காய்கறிகள் விளைவிக்க தொழில்நுட்பத்தின் வாயிலாகவும், பருவ நிலைக்கு ஏற்ற வகையிலும் சாகுபடி பணிகள் மேற்கொள்வது குறித்து பல்கலைக் கழகங்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. காய்கறிகளை யார் பதுக்கினாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார்.