Skip to main content

"அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்"- கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!

Published on 19/02/2022 | Edited on 19/02/2022

 

"Strict action should be taken against that person" - Kanimozhi MP Insistence!

 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று (19/02/2022) காலை 07.00 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்த நிலையில், மாலை 06.00 மணியுடன் நிறைவு பெற்றது. இந்த நிலையில், மதுரை மாவட்டம், மேலூர் நகராட்சியின் 8 ஆவது வார்டில் உள்ள அல்அமீன் பள்ளிக்கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்காளர்களிடம் ஹிஜாப்பை அகற்றுமாறு பா.ஜ.க. முகவர் கிரிராஜன் வலியுறுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

பா.ஜ.க. முகவர் கிரிராஜன் கூறியதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், பிற கட்சிகளைச் சேர்ந்த முகவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், தி.மு.க., அ.தி.மு.க., உள்ளிட்ட பிற கட்சிகளின் முகவர்களிடம் பா.ஜ.க. முகவர் கிரிராஜன் வாக்குவாதம் செய்தார். இதைத் தொடர்ந்து, தேர்தல் அலுவலர்கள், பிற கட்சிகளின் முகவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் தொடர்ச்சியாக, வாக்குச் சாவடி மையத்தில் இருந்து பா.ஜ.க. முகவரை வெளியேற்றிய காவல்துறையினர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே, பா.ஜ.க. முகவர் கிரிராஜன் மீண்டும் வாக்குச்சாவடி மையத்துக்கு நுழைய முயன்றதாகக் கூறப்படுகிறது. 

 

இதனால் சிறிதுநேரம் நிறுத்தப்பட்ட வாக்குப்பதிவு பா.ஜ.க.வின் மாற்று முகவர் வந்ததும் மீண்டும் தொடங்கியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இந்த வாக்குச்சாவடி மையத்தைச் சுற்றிலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். 

 

பா.ஜ.க. முகவர் வாக்காளரின் ஹிஜாப்பை அகற்ற வலியறுத்தியதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தி.மு.க.வின் மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினருமான கனிமொழி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், "மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாய்த் திகழும் தமிழகத்தில், மதுரை மேலூர் நகராட்சி வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த ஒரு இஸ்லாமியப் பெண்ணிடம், பா.ஜ.க. பூத் நிர்வாகி ஹிஜாப்பை அகற்றச் சொல்லிக் கட்டாயப்படுத்தியிருப்பது கண்டனத்திற்குரியது. நல்லிணக்கத்திற்குத் தீங்கு விளைவிக்க முயன்ற அந்த நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார். 

 

அதேபோல, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐிஇடி கல்லூரி வாக்குச்சாவடியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பாஜகவின் இம்மாதிரியான செயல்பாடுகளுக்கு எதிராக குரல் கொடுத்து வருவதாகவும், தமிழ்நாட்டு மக்களும் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்றும் கூறினார்.


 

சார்ந்த செய்திகள்