Skip to main content

“போதைப்பொருள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 25/08/2023 | Edited on 25/08/2023

 

Strict action should be taken against dealers Chief Minister M.K.Stalin

 

நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், "கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டத்தின் கீழ், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களின் காவல்துறை உயர் அலுவலர்களுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பாக ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (25.8.2023) நடைபெற்றது.

 

இந்த கூட்டத்தில் முதல்வர் பேசுகையில், “கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதும், எல்லாம் தானாக நடந்துவிடும் என்று நினைக்காமல், மக்களுக்கு நெருக்கமாக களத்துக்குச் சென்று, கண்காணிக்கவும் செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடுதான் "கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற திட்டத்தை நாங்கள் தொடங்கியிருக்கிறோம். மற்ற துறை ஆய்வுகளைவிட உள்துறை ஆய்வு என்பது மிக மிக முக்கியமானது. உள்துறை சரியாக இருந்தாலே அனைத்து துறைகளும் சிறப்பாக இருக்கவேண்டும் என்று நினைக்கின்றவன் நான். அமைதியான மாநிலத்தில்தான் அனைத்து வளர்ச்சிகளும் அமையும் என்று உங்களுக்கே தெரியும்.

 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் நடந்ததற்குப் பிறகு, ஏராளமான புதிய புதிய தொழிற்சாலைகள், நிறுவனங்கள், கம்பெனிகள் வந்திருக்கிறது. தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. அதற்கு மிக முக்கியமான முதல் காரணம், இந்த ஆட்சி மீதான மரியாதையும், நம்பிக்கையும் தான். இரண்டாவது முக்கியக் காரணம், மாநிலத்தில் நிலவும் அமைதி. கடந்த 2 ஆண்டுகளில், எந்தவொரு பெரிய சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சினையும் தமிழ்நாட்டில் ஏற்படவில்லை. அந்த அமைதியை நிலைநாட்டக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிலை தொடர, காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கவேண்டும். குறிப்பாக, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் தடுப்பு,கொலை மற்றும் கொள்ளை போன்றவற்றை தடுக்கவேண்டும் என்று பலமுறை நான் அறிவுறுத்தியிருக்கின்றேன்.

 

இதைத் தொடர்ந்து குற்றங்கள் மிக மிகக் குறைந்துகொண்டு வருகிறது. முழுமையாக குறைந்துவிட்டது என்று நான் சொல்ல மாட்டேன். அது உங்களுக்கும் தெரியும். குற்றங்கள் குறைப்பதாக இல்லாமல், குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதாக உங்கள் பணி அமையவேண்டும். போதை மருந்து மிகப்பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனையாக மட்டுமில்லை, எதிர்கால வளர்ச்சிக்கும் அது தடையாக இருக்கிறது. மாணவர் மற்றும் இளைஞர்களுக்கு குட்கா, பான் மசாலா போதைப்பொருளின் தீமைகள் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். கடந்த 2 ஆண்டுகளாக, ஆகஸ்ட் 11 அன்றைக்கு என் தலைமையில் போதைப் பொருட்கள் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சியை நடத்தியதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள். போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும். இனி கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனை கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் கடுமையாக எச்சரிக்கிறேன்” என தெரிவித்தார்.

 

Strict action should be taken against dealers Chief Minister M.K.Stalin

 

இக்கூட்டத்தில், முதலமைச்சரின் கூடுதல் தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், உள்துறை முதன்மைச் செயலாளர் பெ. அமுதா, காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், சட்டம் மற்றும் ஒழுங்கு காவல்துறை கூடுதல் இயக்குநர் ஆ. அருண், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஜானி டாம் வர்கீஸ், திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தி. சாருஸ்ரீ, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.பி. மகாபாரதி, திருச்சி மண்டல காவல்துறை தலைவர் ஜி. கார்த்திகேயன், தஞ்சாவூர் சரக காவல்துறை துணைத் தலைவர் த. ஜெயச்சந்திரன், நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங், திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் து.பெ. சுரேஷ் குமார், தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஸ் ராவத்,  மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. மீனா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

 

 


 

சார்ந்த செய்திகள்